தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகாரித்தால் ஐந்தாண்டுகளில் நாடு பொருளாதார வல்லரசாகும் - சிறிதரன் எம்.பி.
இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சி என்பது 1977 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து மெல்ல மெல்ல உருவான ஒரு பாரிய சரிவாகும்.
வடக்கு,கிழக்கு தமிழர்களின் தாயகம், அவர்கள் ஒரு தேசிய இனத்தவர்கள். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்பதை அநுர தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் ஐந்தாண்டுகளில் இலங்கை பொருளாதார வல்லரசாக மாறும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சமகாலத்தில் காணப்படுகின்ற பூகோளப் பதற்றங்களை காரணம் காண்பித்து இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான செயற்பாடுகளை திட்மிட்டு தாமதப்படுத்தி வருவதாகவும் இச்செயற்பாடு கடந்த கால அரசாங்கங்களைப் போலவே காலம்கடத்தும் நடவடிக்கையெனவும் அவர் குற்றம் சாட்டினார்.
சமகால நிலைமைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சி என்பது 1977 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து மெல்ல மெல்ல உருவான ஒரு பாரிய சரிவாகும். இது இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்பதை விட சிங்களப் பேரினவாதம் என்பது தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை நசுக்க முனைந்த பொழுதும் அந்த உரிமைகளை ஆயுத ரீதியாக அடக்க முற்பட்ட பொழுதும் பொருளாதாரப் பின்னடைவுகள் இலங்கைக்கு ஏற்பட்டுக்கொண்டே இருந்தன.
தன்னுடைய சகோதர இனங்களை அரவணைத்து தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை வழங்கி அவர்களோடு கைகோர்த்து இந்த நாட்டை வளர்ப்பதற்குப் பதிலாக தமிழ் மக்களை அழிப்பதிலும் அவர்களுடைய நிலங்களைப் பறிப்பதிலும் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதிலுமே மாறி மாறி வந்த இலங்கை அரசாங்கங்கள் அதிக அக்கறை காட்டின.
அரசாங்கங்கள் மாறினாலும் ஆட்சிக்கு வருகின்ற தலைவர்களுடைய இனவாத நோக்கமும் அரசியலுக்கான மூலதனமாக இருக்கின்ற இனவாதமும் என்றுமே மாறவில்லை. இதற்கு எந்த அரசாங்கங்களும் விதிவிலக்கல்ல. குறிப்பாக தற்போதைய அநுர அரசாங்கம் கூட கடந்த 1987 ஆம் ஆண்டிலே கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராகவும் மிக மோசமாகப் போராடியவர்களாவர். அதேபோன்று அன்று இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை நீதிமன்றம் ஊடாகப் பிரித்தவர்களும் இவர்களே ஆவர்.
கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உருவாக்கப்பட்ட அந்த இடைக்காலச் செயல்பாடுகள் மற்றும் சுனாமி அனர்த்தத்தின் போது அமைக்கப்பட்ட சுனாமிக்குப் பின்னரான பொதுக்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய இணக்கப்பாடுகளைச் செயலற்றதாக்குவதற்காக அன்றைய அமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதி தனது பதவியைத் துறந்தவர் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஆகவே இலங்கையில் எந்த அரசாங்கங்கள் வந்தாலும் அவர்களிடம் அரசியல் மூலதனம் என்பது தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதமாகவே காணப்படுகிறது. இப்பொழுது இருக்கின்ற பொருளாதார வீழ்ச்சி என்பது திட்டமிடப்பட்ட ஒன்று என்பதற்கு அப்பால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் முறையான பொருளாதாரச் சிந்தனைகள் இல்லாமல் வெறும் கடன் அடிப்படையிலான திட்டங்களையும் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகளை மட்டும் கொண்டிருந்த இலங்கை பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் தூரநோக்கற்ற பார்வைகளே இலங்கையை மீண்டும் ஒரு பொருளாதாரச் சிக்கலுக்குள் தள்ளி இருக்கிறது. இதனை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு அரசியல் தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க விரும்பாமல் அல்லது அரசியல் தீர்வைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாத அநுர அரசாங்கமும் காலத்தை இழுத்தடிக்கவே விரும்புகிறது.
நாடு திவாலாகி இருக்கிறது என்றும் தற்போதைய சர்வதேச ரீதியான போர்ப் பதற்றங்களால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கிற வீழ்ச்சி இலங்கையை கடுமையாகப் பாதித்திருக்கிறது என்றும் அதனால் எங்களால் அரசியல் தீர்வை நோக்கி முன்னேற முடியாது என்றும் இவர்கள் கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.
முதலாவது எமது தெரிவு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதுதான் என்ற பழைய அரசாங்கங்கள் சொன்ன அதே போலி வார்த்தைகளை மீண்டும் இவர்கள் உச்சரிக்கத் தலைப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்களும் பழைய ஆட்சியாளர்களைப் போன்றவர்களே என்பது மிகத் தெளிவானது. இதனை நாங்கள் பலமுறை பல நாடுகளுக்கும் தூதுவர்களுக்கும் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
எமது மக்கள் கடந்த காலங்களில் இந்த அரசியல் உணர்வுகளை நேரடியாகப் பார்த்தவர்கள். குறிப்பாக உலகத்திலே பொருளாதார இயலுமைக் குறைவுகள் ஏற்பட்டிருந்த வேளையில் 1990 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட பத்தொன்பது வருடங்கள் இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கிலே விதித்திருந்த மிகப்பெரிய பொருளாதாரத் தடைகளைத் தாண்டி தற்சார்புப் பொருளாதாரத்தினூடாக வளர்ந்தவர்கள் தமிழர்கள் ஆவர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடைய துரிதமான நடவடிக்கைகளின் ஊடாகப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் அந்தப் காலக்கட்டங்களில் ஒரு கிலோ அரிசி பதினான்கு ரூபாய்க்கு தமிழ் மக்கள் வாங்கக்கூடியதாக இருந்தது.
பொருளாதாரத்தைத் தற்சார்புப் பொருளாதாரம் இல்லாத தங்குநிலைப் பொருளாதாரமாகக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கம் தோல்வியடையும் என்பதும் தற்சார்புப் பொருளாதாரத்தைக் கட்டி வளர்க்காத அரசாங்கத்தின் செயல்பாடுகள் எப்போதும் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் என்பதற்கும் இன்றைய நிலைமைகளே சான்றாகும். இன்றைய அரசாங்கம் தூரநோக்குப் பார்வைகளைக் கொண்டிருக்கவில்லை.
அவர்களும் நீண்ட காலம் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தே அரசியல் செய்து வந்தவர்கள். ஆனால் யதார்த்தபூர்வமான கள நிலவரங்களைச் சரியாக எடைபோட்டு அதன் ஊடாக இலங்கையில் இருக்கின்ற தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை எட்டித் தமிழர்களையும் இந்த நாட்டின் பங்காளிகளாக அரவணைத்துச் செல்லுகின்ற இதயசுத்தி இப்பொழுது இருக்கின்ற தலைவர்களிடம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இந்தத் தூரநோக்குடன் வடக்கு கிழக்கு என்பது தமிழர்களுடைய வரலாற்று வழித் தாயகம் அவர்கள் இந்த மண்ணிலே ஒரு தேசிய இனம் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்குரியவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் முன்நகருமானால் இலங்கையை ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு பொருளாதார வல்லரசு நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்
ஆனால் அந்தப் பார்வை இவர்களிடம் இல்லை. தமிழர்களுடைய தீர்வை வழங்குவதில் காலத்தை இழுத்தடித்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளையே இவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்தவர்கள். அந்தத் தியாகங்களின் வல்லமையும் நிலத்திற்காக அவர்கள் கொண்டிருக்கின்ற உறுதித்தன்மையும் அவர்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் உரிமையைப் பெற்றுத் தரும். அதற்கான ராஜதந்திர மற்றும் உள்ளக ரீதியான தொடர் முயற்சிகளை நாங்கள் முன்னெடுப்போம் என்றார்.





