செப்டெம்பர் நெருங்குகையில் விவகாரங்கள் பூதாகரமாக்கப்படுகின்றன: அமைச்சர் பிமல்
யுத்தத்தினால் மரணித்தோர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் சில சந்தர்ப்பங்களில் அநாவசிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

யுத்தத்தினால் மரணித்தோர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் சில சந்தர்ப்பங்களில் அநாவசிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. நான் பல தடவைகள் மனிதப்புதைகுழிகளைச் சென்று பார்வையிட்டிருக்கிறேன். உதாரணமாக கடந்த மேமாதம் நான் செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டபோது, அங்கு ஒரு காவலர் கூட இருக்கவில்லை. ஆனால் செப்டெம்பர் மாதம் நெருங்கும்போது இவ்விடயங்கள் பூதாகரமாக்கப்படுவதைப் பார்க்கிறோம். குறுகிய அரசியல் நோக்கிலான இவ்வாறான செயற்பாடுகளை மக்களே புறக்கணிக்கவேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் 29-08-2025 அன்று கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகையில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறியதாவது:
வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்கமுடியாமல், கடன்பட்டவன் என்ற ரீதியிலேயே நான் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறேன். அதுமாத்திரமன்றி பெரும் எண்ணிக்கையானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதொரு கட்சியையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அந்தவகையில் இவ்விவகாரத்துக்கு உரியவாறு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு சுமார் 7 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. கடந்த காலங்களில் அவ்வலுவலகத்தின் ஊடாக சில விடயங்களைச் செய்யமுடியாமல்போனது. அதற்கு அந்த அலுவலகத்தின் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் காரணமாகக் கூறப்பட்டன. இருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்பது ஓய்வூதியத்திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்களைப் போன்றதல்ல. மாறாக அது துரிதமாகவும், செயற்திறன்மிக்கவகையிலும் இயங்கவேண்டியதொரு கட்டமைப்பாகும். அந்தவகையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் இயங்குகைக்கு அவசியமான சகல ஒத்துழைப்புக்களும் நீதியமைச்சினாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலும் வழங்கப்படும்.
வலிந்து காணாமலாக்கப்படல் என்பது பாதிக்கப்பட்ட தரப்பினரின் மனதில் ஆயுள் முழுவதும் நிலைத்திருக்கக்கூடிய காயமாகும். எனவே இதற்கு முக்கியத்துவம் வழங்கி உடனடியாகத் தீர்வுகாணப்படவேண்டியது அவசியமாகும். அதேவேளை இவ்வலிந்து காணாமலாக்கப்படல் குற்றங்கள் அனைத்தும் மாறுபட்ட அரசியல் பின்னணியுடன் நிகழ்ந்தவையாகும். எனவே சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவதன் ஊடாக மாத்திரம் இதற்குத் தீர்வுகாணமுடியாது. ஆகையினால் அரசுகள், அமைப்புக்கள், தனிநபர்கள் என சகல தரப்பினர் மத்தியிலும் இதனை முறையாகக் கையாளக்கூடியவாறான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நாம் ஸ்தாபிப்போம்.
அடுத்ததாக யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களை உறுதிப்படுத்துவது என்பது சிக்கலான விடயமாகும். எனவே குறிப்பாக மனிதப்புதைகுழிகளில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் தொடர்பில் பகுப்பாய்வுகளை முன்னெடுப்பதற்கு அவசியமான வசதிகளை எமது நாட்டிலேயே ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது இவ்வாறிருக்க யுத்தத்தினால் மரணித்தோர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் சில சந்தர்ப்பங்களில் அநாவசியமான அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. நான் பல தடவைகள் மனிதப்புதைகுழிகளைச் சென்று பார்வையிட்டிருக்கிறேன். உதாரணமாக கடந்த மேமாதம் நான் செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டபோது, அங்கு ஒரு காவலர் கூட இருக்கவில்லை. ஆனால் செப்டெம்பர் மாதம் நெருங்கும்போது இவ்விடயங்கள் பூதாகரமாக்கப்படுவதைப் பார்க்கிறோம். குறுகிய அரசியல் நோக்கிலான இவ்வாறான செயற்பாடுகளை மக்களே புறக்கணிக்கவேண்டும் என்றார்.