இனஅழிப்புக்கு நீதிகோரி வட,கிழக்கிலும் கொழும்பிலும் போராட்டம்
வவுனியா புதியபேருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வட,கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சமூக செயற்ப்பாட்டாளர்கள்,தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள்,பொது அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எமக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச சுதந்திரமான நீதிவிசாரணை வேண்டும். இலங்கையின் எந்தவொரு உள்ளகப்பொறிமுறைகளாலும் எமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தி வடக்கு,கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் மற்றும் கொழும்பில் பாதிக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டு கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் 'தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும்' எனும் தொனிப்பொருளில் நேற்றையதினம் காலை 10மணிக்கு முன்னெடுக்கப்பட்ட இந்தப்போராட்டங்களில் அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சர்வதேச நீதியே எமக்கு வேண்டும், செம்மணி இனப்படுகொலையின் அடையாளம், காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, சுதந்திரமான வாழ்க்கை எப்போது, இனப்பிரச்சினைக்கு தீர்வு எங்கே?, உள்ளிட்ட வாசனங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பினார்கள். அதன்பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்துக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரில் கையொப்பமிடும் நிகழ்விலும் பங்கேற்றிருந்தனர்.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக 'மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு' அமைப்பினர் கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாக நேற்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதி கோரும் வகையில் குழந்தை பொம்மை, பாடசாலை புத்தகைப் பைகள் என்பவற்றையும் காட்சிப்படுத்தியதோடு சர்வதேச நீதிக்கோரிக்கையை விடுக்கும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதில், மலையக சிவில் சமூகப் பிரதிநிதிகள், தென்னிலங்கை முற்போக்கு சிங்கள சிவில் சமூகத்தரப்பினர், மதத்தலைவர்கள் உள்ளிட்டவர்கள் பலவரும் பங்கேற்றிருந்தனர்.
யாழ். மாவட்டத்துக்கான போராட்டமானது, செம்மணிப் புதைகுழிக்கு அண்மித்த நல்லூர் வீதி வளைவு பகுதியில்; முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை தாங்கியவாறும், சர்வதேந நீதிக்கோரிக்கைக்கான பதாகைகளை ஏந்தியவாறும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்று கோசமிட்டனர்.
இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவயோகநாதன் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா புதியபேருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வட,கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சமூக செயற்ப்பாட்டாளர்கள்,தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள்,பொது அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பங்கேற்றவர்கள் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனயைடுத்து சர்வதேச நீதிபொறிமுறையை வலியுறுத்தி கையெழுத்தும் திரட்டப்பட்டது.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது முல்லைத்தீவில் மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் லோகேஸ்வரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜுட்சன்,வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி லவகுசராசா, மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
திருகோணமலை சிவன் கோவில் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான தீர்வினை வழங்கப்போவதில்லை என்பதால் எங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடான நீதியே அவசியமாகும் என்று வலியுறுத்தினர்.
இதில் பாதிக்கப்பட்ட மக்கள், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூதாய மன்றங்களின் உறுப்பினர்கள், பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு 'தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இறுதியில் ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய மகஜரில் கையெழுத்திட்டனர்.
இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு பதாதையினை ஏந்தியவாறு நீதி கோரிய கோசங்களை எழுப்பினர். பின்னர் சர்வதேசத்துக்கான மகஜரில் தமது கையொப்பங்களைப் பதிவுசெய்தனர்.