தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த தயார்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிதி அமைச்சுடன் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்துமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
தீர்க்கப்படாத தொழிசார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இலங்கையின் இலவச பொதுச் சுகாதார மற்றும் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தத் தயாராக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி தமது அடுத்த கட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தழுவிய ரீதியிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர தமது மத்திய செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சமூகம் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் தொழில்சார் சவால்களையே இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக வசதிகள் அல்லது கொடுப்பனவுகள் அன்றி, பெரும்பாலும் தனிப்பட்ட அபாயங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ சேவைத் தேவைகளுக்கு அப்பால் மருத்துவர்கள் ஆற்றிவந்த பணிகளிலிருந்து விலகியிருப்பதே தற்போதைய நடவடிக்கையாகும் என சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவொரு அசௌகரியத்திற்கும் அரசாங்கமும் சுகாதார அமைச்சருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மருத்துவ இடமாற்றங்களுடன் தொடர்புடையது என சில தரப்பினரால் பரப்பப்படும் கருத்துக்களை அந்த சங்கம் நிராகரித்துள்ளது. இடமாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் சில சிரேஷ்ட அதிகாரிகளின் திறமையின்மை காரணமாக சுமார் 8,000 மருத்துவ இடமாற்றங்கள் இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில அதிகாரிகளால் சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்களால் முரண்பாடான பகிரங்க அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது அமைச்சிற்கும் அமைச்சரின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடின்றி முறையான நடைமுறைகளின் கீழ் மருத்துவ இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என 23,000 உறுப்பினர்களைக் கொண்ட தமது சங்கம் கோருவதாகவும், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை பரந்த அளவிலான கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து வகை மருத்துவர்களையும் உள்ளடக்கிய பிரத்யேகமான 'இலங்கை மருத்துவ சேவை' ஒன்றை உருவாக்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுதல், 22/99 சுற்றறிக்கைக்கு இணங்க போக்குவரத்து தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல், மேலதிக பணி கொடுப்பனவை நிரந்தரப் பலனாக மாற்றுதல், ஆய்வு கொடுப்பனவு தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல், முதுகலை பயிற்சி மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல் மற்றும் பொதுச்சுகாதாரக் கட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கையை இற்றைப்படுத்துதல் ஆகியன இக்கோரிக்கைகளில் அடங்கும்.
எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிதி அமைச்சுடன் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்துமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. அரசாங்கமும் சுகாதார அமைச்சும் தமது கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்தால், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த ஏகமனதாக நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, பொதுச் சுகாதாரத் துறையின் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 11ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மேலதிக சுகாதார மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் முடிவுகள் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.





