ஆண்டின் இறுதிக்குள் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் அறிமுகம்: அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ
சீன தூதரகம் மற்றும் சினோபெக் அலுவலகங்கள் உள்ளிட்ட தொடர்புடைய பங்காளர்களுடன் நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியுள்ள நிலையில் தற்போது அவை இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
முதலீட்டாளர்களிடையே ஏற்படும் ஏதேனும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
புதிய சட்டமூலமானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் வெளிப்படைத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை குறித்த சட்டமூலம் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இதேவேளை, சினோபெக் திட்டம் சம்பந்தமான உரையாடல்கள்இறுதி கட்டத்தில் இருப்பதால், 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள குறித்த திட்டம் விரைவில் அமலாக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த திட்டம் சம்பந்தமாக நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதோடு விரைவில் குறித்த திட்டத்தினை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சீன தூதரகம் மற்றும் சினோபெக் அலுவலகங்கள் உள்ளிட்ட தொடர்புடைய பங்காளர்களுடன் நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியுள்ள நிலையில் தற்போது அவை இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு அதிவேகமான பொருளாதார வளர்ச்சி தேவையாக உள்ளது என்றும் தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அரசியல் கட்டமைப்புகள் போன்ற எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதன் ஊடாக அதனை முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





