தண்டனை சட்டக் கோவை நூலின் பிரதி உள்ளிட்ட பொருட்களை வழங்கிய பெண் சட்டத்தரணி கைது
அனுமதி பத்திரம் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தால் வழங்கப்படும் சட்டத்தரணிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி குற்றச்செயலுக்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
        
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இஷாரா செவ்வந்தி துப்பாக்கியை மறைத்து நீதிமன்றத்தினுள் எடுத்து வருவதற்காக தண்டனை சட்டக்கோவை நூலின் பிரதி உள்ளிட்ட பொருட்களை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றத்தின் பேரில் மேற்படி சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலை தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வர்த்தகர் என அறியப்படும் கோரலகமகே மன்தினு பத்மசிரி பேரேரா என்னு கேஹல்பத்தர பத்மேவினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட குற்றசெயல் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபரான கேஹல்பத்தர பத்மேவினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், சட்ட விரோதமான முறையில் துப்பாகிகளை சேகரித்து அவற்றை பதுக்கி வைத்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வணிகக் குற்றப்பிரிவினரால் தீவிர விசாரணை முன்னேடுக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் உள்ள கேஹல்பத்தர பத்மேவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை சம்பவத்தில் மேலும் பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் 5 ஆம் இலக்க விசாரணை அறையில் வைத்து பிரபல பாதாள உலககுழு உறுப்பினரான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த துப்பாக்கி தாரியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவத்தில் துப்பாக்கிதாரி சட்டத்தரணி போல் வேடமனிந்து நீதிமன்றத்தினுள் நுழைவதற்காக உதவிகளை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
55 வயதுடைய கடவத்த பகுதியை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேகநபர் சட்டத்தரணிகள் அணியும் 2 டைகள், தண்டனைச் சட்டக்கோவை நூலின் இரு பிரதிகள், சட்டத்தரணிகளின் வாகனங்களில் காட்சிப்படுத்தப்படும் அனுமதி பத்திரம் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தால் வழங்கப்படும் சட்டத்தரணிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி குற்றச்செயலுக்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இஷாரா செவ்வந்தியே துப்பாக்கியை தண்டனை சட்டக்கோவையின் பிரதியோன்றில் மறைத்து வைத்து நீதிமன்றத்தினுள் கொண்டு வந்து துப்பாகிதாரியிடம் வழங்கியிருந்தமை விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. மேற்படி சந்தேகநபரை நீதிமன்ற உத்தரவின் பேரில் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய உள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.





 
  
