காற்றாலைக்கு எதிராக மக்கள் அலையென திரண்டு போராட்டம்: முடங்கியது மன்னார்
காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் கண்டனப்பேரணி ஆரம்பமானது.
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் பொதுமுடக்கம் இடம்பெற்றதோடு கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
பொதுமுடக்கத்து மன்னார் மாவட்டத்தின் அத்தனை கட்டமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியதோடு, பேரணியில், மன்னார் மாவட்டத்தின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், அருட்தந்தையர்களும் பங்கெடுத்ததோடு, வட,கிழக்கின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைகலநாதன், துரைராசா ரவிகரன், காதர் மஸ்தான், மனோகணேசன், காவிந்த ஜயவர்த்தன உள்ளிட்டவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதனைவிடவும், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் என்று பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு, கலகமடக்கும் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும், நீர்த்தாரை வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
முடங்கியது மன்னார்
மன்னார் மாவட்டம் 29-09-2025 காலை முதலே வெறிச்சோடிக்காணப்பட்டதோடு அனைத்துச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, மன்னார் பஜார் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்ததோடு, பொதுவாக அனைத்துக் கிராமங்களுமுள்ள கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதையும் தவிர்த்திருந்தனர்.
எனினும், மருந்தகங்கள் மற்றும் உள்ளுரில் காணப்பட்ட சிறுகடைகள் ஆகியன அத்தியாவசியமான தேவைகளுக்காக திறக்கப்பட்டிருந்தன.
ஒன்றுகூடிய பொதுமக்கள்
மன்னார் மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் காலை 7மணியிலிருந்தே மக்கள் ஒன்றுகூட ஆரம்பித்திருந்தனர்.
குறிப்பாக, மன்னார் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களில் இருந்தும் பங்குத்தந்தையர்கள் மற்றும் அருட்தந்தையர்களின் உதவியுடன் பொதுமக்கள் மைதானத்தை வந்தடைய ஆரம்பித்தனர்.
அதேபோன்று கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பிரத்தியேகமாக தயார்ப்படுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் பொதுமக்கள் வருகை தந்தனர்.
கண்டன பேரணி
இந்நிலையில் காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் கண்டனப்பேரணி ஆரம்பமானது.
மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் கடந்த பொலிஸாரினால் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் தாக்கப்பட்டமை ஆகிய விடயங்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு பேரணி ஆரம்பமானது.
அப்பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று பின்னர் பொலிஸ் நிலைய வீதியூடாக பஜார் பகுதியை சென்றடைந்தது.
பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியாக கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து பொலிஸாரின் தாக்குதல்களுக்கு எதிராகவும் கண்டனங்களை வெளியிட்டனர்.
இதனால் அவ்விடத்துக்கு பொலிஸார் அதிகளவில் பிரசன்னமாகவும் பற்றமான நிலைமை உருவெக்க ஆரம்பித்தனர். பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்றுகூடிய பகுதிக்கு வருகை தந்திருந்தார்.
மகஜர் கையளிப்பு
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் சார்பில் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அனுப்பி வைக்கவேண்டிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரைப் பெற்றுக்கொண்ட கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அறிவித்ததோடு போராட்டத்தை கைவிட்டுச் செல்லுமாறும் கோரியிருந்தார்
போராட்டத்தால் பதற்றம்
அரசாங்க அதிபரின் கோரிக்கையை ஏற்று போராட்டக்காரர்கள் மாவட்டச் செயலக முன்றலில் இருந்து அகன்று மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
விசேடமாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பி வலியுறுத்தினர்.
இதனால் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நிலைமைகள் தொடர்ச்சியாக மோசமடைந்ததை அடுத்து கலகமடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து மத தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், பொலிஸாருடனும் சமரசமாக உரையாடி நிலைமைகளை சூமுகமாக்கினார்கள்.
இதனைத்தொடர்ந்து குறித்த போராட்டக்காரர்கள் பஜார் பகுதியில் இடம்பெறும் தொடர்போராட்ட அரங்கிற்கு அருகில் சென்று தமது எதிர்ப்புக்களை தொடர்ச்சியாக வெளியிட்டனர்.விசேடமாக, வசந்த முதலிகே தலைமையிலான மக்கள் போராட்ட அணியினரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
58ஆவது நாளாகவும் தொடர்ந்த போராட்டம்
இதேவேளை, மன்னார் தீவுப்பகுதியில் முன்னெடுக்கும் காற்றாலைத் திட்டத்தினையும், கனிய மணல் அகழ்வு செயற்றிட்டத்தினையும் உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டம் 58ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





