அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா?: நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி கேள்வி
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள், குறிப்பாக செம்மணியில் கண்டறியப்பட்ட மனித எச்சங்கள் கடந்த காலத்தின் கொடூரங்களை நினைவுறுத்துகின்றன.
ஒரு நாட்டில் போர் முடிவுக்குவருவதை மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருள்கொள்ளமுடியாது. இலங்கையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் சர்வதேச மட்டத்தில் ஒரு மிதமான நம்பிக்கையுடன் நோக்கப்பட்டன. ஆனால் அந்நம்பிக்கைக்கு காரணமாக அமைந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட மாற்றங்கள் உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி நிலவுகிறது என நோர்வே தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்னம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று ஒரு வருடகாலம் பூர்த்தியடைந்திருக்கும் பின்னணியில், இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பான சிறப்பு இடையீட்டு விவாதம் 26-02-2026 அன்று நோர்வே பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கம்ஷாயினி குணரத்னத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாகவே இவ்விவாதம் நடைபெற்றது. அதற்கமைய அங்கு உரையாற்றிய கம்ஷாயினி குணரத்னம் மேலும் கூறியதாவது:
நான் 1988 இல் இலங்கையில் போர்ச்சூழலில் பிறந்தேன். நான் எனது தாயின் கருவில் இருந்தபோது, ஒவ்வொரு முறை விமானத்தாக்குதலுக்கான அபாயச்சங்கு முழங்கும்போதும் எனது தாயார் கோவில்களிலும் பாடசாலைகளிலும் ஒளிந்துகொள்வார்.
நானும் எனது தம்பியும் இலங்கையில் பிறந்தோம். ஆனால் வாழ்க்கை எம்மை மிகப்பாதுகாப்பான நோர்வே நாட்டுக்கு அழைத்துவந்தது. 2009 ஆம் ஆண்டு மேமாதம் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் ஒரு போர் முடிவுக்குவருவதை மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருள்கொள்ளலாகாது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எங்குமே பாதுகாப்பான இடங்கள் இருக்கவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றனர். ஆனால் அங்கும் எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தன. மருத்துவமனைகள், பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள் என்பன பாதுகாப்பு அளிக்கக்கூடிய இடங்களாக இருக்கவில்லை.
மாறாக அவையும் ஆபத்தான பகுதிகளாகவே இருந்தன. தமிழர்களும் முஸ்லிம்களும் பல ஆண்டுகளாக அனுபவித்த இந்தத் துன்புறுத்தல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை இந்தப் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் சகல கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள், குறிப்பாக செம்மணியில் கண்டறியப்பட்ட மனித எச்சங்கள் கடந்த காலத்தின் கொடூரங்களை நினைவுறுத்துகின்றன. அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலரது மனித எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. மாறாக இது பல தசாப்தங்களாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகளுடன் தொடர்புடையதாகும்.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கையில் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தல்கள் சர்வதேச மட்டத்தில் ஒரு மிதமான நம்பிக்கையுடன் நோக்கப்பட்டது. குறிப்பாக, புதிய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு மற்றும் பல தசாப்தகாலப்போர், பொருளாதார நெருக்கடி மற்றும் நம்பிக்கை இழப்பின் பின்னர் அரசியல் ரீதியான மறுசீரமைப்பு தொடர்பில் அவர்கள் வழங்கிய சமிக்ஞைகள் என்பன அந்த மிதமான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன.
அதேவேளை, அவ்வாறு வாக்குறுதி அளிக்கப்பட்ட மாற்றங்கள் உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்று கேட்கவேண்டிய அவசியம் உள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இன்னுமும் இந்துக்கோவில்கள் இடிக்கப்படுவதாகவும், பௌத்த விகாரைகள் நிறுவப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய மனிதப்புதைகுழிகள் கண்டறியப்படுவதும், தொடர்ந்து நிலவும் இராணுவக்கட்டுப்பாடும் மேலும் கவலையளிக்கின்றன எனக் குறிப்பிட்டார்.





