தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன் - சுமந்திரன்
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையையும் கடுமையாக எதிர்த்தது.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி அவசியம் என்ற தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருப்பதன் காரணமாகவே நான் அதனை நிராகரித்தேன் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு 01-03-2026 அன்றுகொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது: நானறிந்தவரை பாரதி மிகப்பண்பானவர். யாருடைய மனமும் நோகாதபடி நடந்துகொள்ளக்கூடியவர். நான் கூறியதாக ஏதேனும் செய்திகள் வரும்போது எல்லாம், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'இப்படி ஒரு செய்தியைப் பார்த்தேன். நீங்கள் இவ்வாறு கூறினீர்களா?' எனக் கேட்பார். அவ்வாறு அவர் கேட்ட பல சந்தர்ப்பங்களில் எனது பதில் 'இல்லை' என்பதாகவே இருந்திருக்கிறது. எனவே ஒரு செய்தியைப் பிரசுரிப்பதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மை பற்றி உரிய நபரிடமே கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தது.
அடுத்தது பொதுவாக அஞ்சலிக்கூட்டங்களில் நான் அரசியல் பேசுவதற்கு விரும்புவதில்லை. ஆனால் இங்கு எம்மை நோக்கி சில மோசமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையினால், அவற்றுக்குப் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது.
அதாவது மலையக அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவதாகக்கூறி அவர்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டதுடன் மாத்திரமன்றி, தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது சுயதேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்தும் இணையாமலும் செயற்படுவதாக மிக அபாண்டமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மனோகணேசன் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ரவூப் ஹக்கீம் பல்வேறு அரசாங்கங்களில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளான நாங்கள் எந்தவொரு அரசாங்கத்திலும் அமைச்சர்களாகப் பதவி வகித்ததில்லை. மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி இருக்கவேண்டும் என்ற தமிழ்மக்களின் அபிலாசையில் நாம் எப்போதும் உறுதியாக நின்றிருக்கிறோம். தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம்.
நாம் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினருடன் சுமுகமான அறிமுகத்தைப் பேணியிருந்தாலும் அவர்களுக்கும் எமக்கும் இடையில் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக ஆரம்பத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் விடுதலை முன்னணி இருந்தது. ஆனால் 1989 ஆம் ஆண்டு கட்சிக்குள் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக மாற்றிக்கொண்டது.
அதனைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையையும் கடுமையாக எதிர்த்தது. இன்று அக்கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தான் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
உண்மையைக் கூறவேண்டுமானால், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருந்திருக்கிறது என்றார்.





