சஜித் பிரேமதாஸவிடம் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுவினர் விசனம்
கடந்த ஜனாதிபதித்தேர்தலின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக நான் களப்பணியாற்றினேன்.
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி உங்களுக்கு ஆதரவளித்த போதிலும், அண்மையில் திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் நீங்கள் செயற்பட்ட விதம் எமக்கு மிகுந்த வேதனை அளிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் தமிழரசுக்கட்சி பாராளுமன்றக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன் தலைமையிலான பாராளுமன்றக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) காலை 8.45 - 9.30 மணி வரை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நேரம் போதுமானதாக இல்லை என சாணக்கியன் சுட்டிக்காட்டியதை அடுத்து, அதனை சீர்செய்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ உறுதியளித்தார்.
அதனைத்தொடர்ந்து கருத்துரைத்த தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், கடந்த வருட இறுதியில் பெரும் சர்ச்சைக்குள்ளான திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சஜித் பிரேமதாஸவின் அணுகுமுறை தமக்கு மிகுந்த வேதனை அளித்ததாக சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக, 'கடந்த ஜனாதிபதித்தேர்தலின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக நான் களப்பணியாற்றினேன். இருப்பினும் திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சஜித் பிரேமதாஸவின் நிலைப்பாடு தவறானதாக இருப்பதாகவும், நீங்கள் கூறியதால் தானே நாங்கள் அவருக்கு வாக்களித்தோம்? இதுபற்றி உங்களால் அவருடன் பேசமுடியாதா? என்றும் அம்மாவட்ட மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்' என துரைராசா ரவிகரன் கரிசனை வெளியிட்டார்.
அதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாஸ, குருந்தூர் மலையில் இராணுவத்தினர் அடாவடித்தனத்தில் ஈடுபட்டபோது, அதற்கு எதிராக தானும் தமிழ் மக்களுடன் களத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், எனவே எந்தவொரு மதத்துக்கு அநீதி இழைக்கப்பட்டாலும், தான் அதற்கு எதிராக முன்நிற்பதாகவும் விளக்கமளித்தார்.
அதனையடுத்து இதுபற்றிப் பிறிதொரு தினத்தில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட அதேவேளை, இந்த மனக்கசப்புக்களை சீர்செய்யும் நோக்கில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி இராப்போசன விருந்துக்கு வருகைதருமாறு தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாஸ அழைப்புவிடுத்தமை குறிப்பிடத்தக்கது.





