எதிர்க்கட்சி தலைவர் சஜித் - பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லாமி கலந்துரையாடல்
ஊழலுக்கு எதிரான பிரித்தானியாவின் சர்வதேசத் தலைமையைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதன் அவசியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லாமியுடன் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லாமி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 17-02-2026 அன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
வர்த்தகம், சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பேரிடர் மீட்சி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக பிரித்தானியா விளங்குவதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, 2026இல் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம் வளர்ச்சியடைந்தமையை பாராட்டியுள்ளார்.
குறிப்பாக, 2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டத்தின் கீழ், இலங்கையின் 92 சதவீத பொருட்கள் சுங்கவரியின்றி பிரித்தானிய சந்தைக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்துள்ளதையும், ஆடைத் தொழில் துறையில் மூலப்பொருட்களைப் பெறுவதற்கான விதிகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளதையும் அவர் பாராட்டினார்.
ஊழலுக்கு எதிரான பிரித்தானியாவின் சர்வதேசத் தலைமையைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்புச் சட்டம் ஆகியவை ஜனநாயக உரிமைகளையும் சிவில் சுதந்திரத்தையும் நசுக்கப் பயன்படுத்தப்படக் கூடாது என எச்சரித்த அவர், இவை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
2025 இறுதியில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளிப் பாதிப்புகளின் போது இங்கிலாந்து வழங்கிய மனிதாபிமான உதவிக்கும், மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் இரங்கல் செய்திக்கும் சஜித் பிரேமதாச நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் டேவிட் லாமியின் சமூக ஒருங்கிணைப்பு குறித்த நூல்களைப் பாராட்டிய சஜித் பிரேமதாச, இலங்கையில் அதிகரித்து வரும் மனித-யானை மோதல்களைத் தீர்க்க சர்வதேச தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.





