தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சந்திப்பு
மலையக மக்களின் கலை, கலாசாரம் மற்றும் கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்து தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும் என முதல்வர் உறுதியளித்தார்.
இலங்கை மற்றும் தமிழ்நாட்டு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் சென்னையில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் வைத்தியர் கணேசநாதன் கேதீஸ்வரனும் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பின் போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதியமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக ஆலோசிக்கப்பட்டது. மலையக மக்களின் கலை, கலாசாரம் மற்றும் கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்து தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும் என முதல்வர் உறுதியளித்தார்.
கடந்த 27ஆம் திகதி வீசிய தித்வா புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவும், அவர்களின் அடுத்த கட்ட நகர்வுக்காக தமிழக அரசின் குறுகிய கால மற்றும் நீண்டகால ஒத்துழைப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மலையக மக்களுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகள் குறித்து தமிழக முதல்வருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமைக்காக தமிழக முதல்வர் இலங்கை அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.





