விமல் கார்ட்போர்ட் மாவீரனாக முயற்சிக்கிறார் - அமைச்சர் விஜித ஹேரத்
நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதும், அவ்விடத்துக்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்துவதைப் போன்று செயற்படுவதும் வெ வ்வேறானதாகும்.
நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கான உரிமை இல்லை. பொலிஸாருக்கு இடையூறு விளைவித்து அநாகரிகமாக நடந்துகொண்ட விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவர் இவ்வாறான சர்ச்சைகளை ஏற்படுத்தி கார்ட்போர்ட் மாவீரனாக முயற்சிக்கிறார் என பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் சாடினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 19-05-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எந்தவொரு பிரஜைக்கும் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கான உரிமை இல்லை. ஆனால் விமல் வீரவன்ச பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தது மாத்திரமின்றி அநாகரிகமாகவும் நடந்து கொண்டார். அதன் காரணமாகவே அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்காகவே பொலிஸார் தலையிட்டனர்.
இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸாரால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதும், அவ்விடத்துக்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்துவதைப் போன்று செயற்படுவதும் வெவ்வேறானதாகும்.
விமல் வீரவன்ச இவ்வாறான சர்ச்சைகளை ஏற்படுத்தி காட்போட் மட்டை வீரராக முயற்சிக்கின்றார். அது இந்நாட்டிலுள்ள சிறு குழந்தைக்கும் புரியும். இது குறித்து நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்தது. எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





