வெளிப்படையான விசாரணைகள் அவசியம் - ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி
எதிர்காலத்தில் இத்தகைய கொடூரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையையும் பரஸ்பர கௌரவத்தையும் வளர்க்க வேண்டியது அவசியம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். நீதி தாமதிக்கப்படுவது நீதி மறுக்கப்படுவதற்குச் சமமாகும். விசாரணைகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு இணங்க வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்ச் தெரிவித்தார்.
கொழும்பு - கொச்சிக்கடை திருத்தலத்தில் 21-04-2026 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நினைவேந்தலில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தத் துயரமான தருணத்தில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்கள் உயிர்களை இழந்த 270க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்களை நாம் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தீராத துயரத்தையும், கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் நீதிக்காகக் காட்டி வரும் அபாரமான மன உறுதியையும் நாம் கௌரவிக்க வேண்டும்.
தாக்குதல் நடந்து இவ்வளவு காலம் கடந்த பின்னரும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். நீதி தாமதிக்கப்படுவது நீதி மறுக்கப்படுவதற்குச் சமம் என்பதை நாம் உணர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகம் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் வெறும் பெயரளவில் இருக்கக்கூடாது. அவை சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு இணங்க, எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி, முழுமையான மற்றும் சுதந்திரமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, வெளிப்படையான முறையில் விசாரணை நடத்துவதை உறுதிப்படுத்துவதன் மூலமே நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். நாட்டின் எதிர்கால அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டிற்கு மிக முக்கியமான தேவையாகும். இவ்வாறான பயங்கரவாத செயல்கள் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்றன. எனவே, எதிர்காலத்தில் இத்தகைய கொடூரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையையும் பரஸ்பர கௌரவத்தையும் வளர்க்க வேண்டியது அவசியம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இணங்க, இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்படுவதை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை ஐக்கிய நாடுகள் சபை தனது ஆதரவையும் குரலையும் தொடர்ந்து வழங்கும் என்பதை இந்த உரையின் மூலம் உறுதிப்படுத்துகிறேன் என்றார்.





