பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சஜித்தின் நிலைப்பாடு என்ன? ஆளும் தரப்பு கேள்வி
பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தனது கட்சியின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்றுணிவோடு அறிவிக்க வேண்டும்.
பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தவறென்று நாமல் ராஜபக்ஷவும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் குறிப்பிடுகிறார்கள். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்றுணிபுடன் அறிவிக்க வேண்டும். எதிர்க்கட்சியின் கீழ்த்தரமான செயற்பட்டுக்கு எதிராக மலையக மக்கள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். மலையக மக்களுக்காக நாங்கள் முன்னிலையாவோமென தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 13-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்தோட்ட கடந்த 200 ஆண்டுகாலமாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.அந்த மக்கள் எனக்கும் வாக்களித்துள்ளார்கள்.ஆகவே அவர்களுக்காக முன்னிலையாக வேண்டிய பொறுப்பு எனக்கும் உண்டு.கடின உழைப்பினால் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் மலையக மக்கள் இன்றும் லயன் அறைகளில் தான் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை ஆரம்பித்த இடத்திலேயே இன்றும் உள்ளது.
மலையகத்தில் லயன் அறையில் தாய், தந்தை என்று ஒரு குடும்பமும், அவர்களின் பிள்ளைகளின் குடும்பமும் வாழ்கின்றன.கண்களை மூடி சற்று சிந்தித்துப் பாருங்கள் எம்மால் அப்படி வாழ முடியுமா என்று? ஒருபோதும் எம்மால் அப்படி வாழ முடியாது. மலையக மக்கள் இன்றும் பாரிய நெருக்கடிகளுக்கும், பின்தள்ளப்பட்ட நிலையிலும் தான் வாழ்கிறார்கள்.
மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உண்மையான நோக்கம் எமக்கு உண்டு.இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. 2025 வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 1750 ரூபா வழங்குவதற்கு முயற்சித்தோம்.இருப்பினும் அது முடியாமல் போனது. ஆனால் இம்முறை அந்த முயற்சி வெற்றிப் பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார்.இதனை நியாயப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியினர் உட்பட எதிர்தரப்பினர் பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா வழங்க வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கியதை கேள்விக்கேட்கிறார்கள்.
பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளம் வழங்க அரச நிதியை ஒதுக்கியுள்ளமை தவறு என்று எதிர்க்கட்சியின் உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவும், எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பேச்சாளரும் குறிப்பிடுகிறார்கள். அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன ' மலையக மக்களுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பு தவறு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்ப்பதா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தரப்பினரது கொள்கை. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளியுங்கள். அரசாங்கம் என்ற அடிப்படையில் பெருந்தோட்ட மக்களுக்காக நாங்கள் முன்னிலையாவோம். மலையக மக்களுக்கு 200 ரூபா வழங்குவதை நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச தரப்பு விரும்பவில்லை.
பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தனது கட்சியின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்றுணிவோடு அறிவிக்க வேண்டும். அப்பாவி மலையக மக்களுக்கு வழங்கும் இந்த சம்பள அதிகரிப்பை நெருக்கடிக்குள்ளாக்குவது முற்றிலும் தவறானது.
ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கும் இந்த அடிப்படையில் தான் அரசாங்கம் சம்பளம் வழங்குகிறது. கொழும்பில் மே தின கூட்டத்தை நடத்த முடியாமல் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மலையகத்துக்கே சென்றார்கள். அப்பாவி மலையக மக்களை ஒன்றிணைத்து மே தின கூட்டத்தை இவர்கள் நடத்தினார்கள். வரலாற்று காலம் முழுவதும் மலைய மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் வாக்களித்துள்ளார்கள்.இம்முறை தான் எமக்கு வாக்களித்துள்ளார்கள்.
200 ரூபா வழங்குவதை எதிர்க்கட்சியினர் இன்று சவாலுக்குட்படுத்தியுள்ளார்கள். எச்சவால்கள் தோற்றம் பெற்றாலும் குறிப்பிட்டதை போன்று பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை நாங்கள் வழங்குவோம். அதேபோல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுப்போம். ஏனெனில் அவர்களின் துயரத்தை நாங்கள் நன்கு அறிவோம். எதிர்க்கட்சியின் இந்த கீழ்த்தரமான செயற்பாட்டுக்கு எதிராக மலையக மக்கள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றார்.





