தனிநபர் விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே பிரதி பாராளுமன்ற செயலாளர் பணி நீக்கம்: அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்
2026 ஜனவரி 23ஆம் திகதி இந்த தனிநபர் விசாரணைக்குழுவின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை பாராளுமன்ற பணியாளர் ஆலோசனை குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
பிரதி பாராளுமன்ற செயலாளர் சமிந்த குலரத்ன பாராளுமன்ற பணியாளர் ஆலோசனை குழுவால் நியமிக்கப்பட்ட, தனிநபர் விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதற்கெதிராக நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 27-01-2026அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்திலுள்ள நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைக்கமைய அலுவலர் ஒருவர் குறித்த தீர்மானத்தை எடுப்பது பாராளுமன்ற பணியாளர் ஆலோசனை குழுவாகும். நிலையியற்கட்டளைக்கமைய சபாநாயகர், சபை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், நிதி அமைச்சர் அல்லது அவரது பிரதிநிதி மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் இதன் அங்கத்தவர்களாவர்.
இக்குழுவில் எதிர்க்கட்சி தலைவர் அல்லது அவரது பிரதிநிதியாக கயந்த கருணாதிலக கலந்து கொள்வார். 2025 ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்ற பணியாளர் ஆலோசனை குழுவானது, குறித்த பாராளுமன்ற பிரதி செயலாளர் தொடர்பில் தனிநபர் விசாரணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானித்திருந்தது. அதற்கமைய 2025 ஆகஸ்ட் 19ஆம் திகதி இந்த விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. பொது நிர்வாக அமைச்சின் அதிகாரியொருவர் இதற்காக நியமிக்கப்பட்டார்.
2026 ஜனவரி 23ஆம் திகதி இந்த தனிநபர் விசாரணைக்குழுவின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை பாராளுமன்ற பணியாளர் ஆலோசனை குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் போலியான தகவல்களை வழங்கி பாராளுமன்ற அலுவலகப் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் பதவிக்கான நியமனத்தைப் பெற்றுக் கொண்டமை மற்றும் தனக்கு பொறுத்தமற்ற சம்பளத்தை பெற்று அரசாங்கத்துக்கு நஷ;டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அவரை பணி நீக்கம் செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் முறைப்பாடளிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரால் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என்றார்.





