பிள்ளையானின் சகோதரர் மீனவர்களுக்கு தடையாக செயற்படுகிறார்: சாணக்கியன்
மாரி காலத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு களுவங்கேணி – புண்ணக்குடாவை இணைக்கும் வகையில் பாலமொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சகோதரர் வாழைச்சேனை பகுதியில் வேலியை அடைத்து மீனவர்களுக்கு தடையாக செயற்படுகிறார். கடந்த காலங்களில் இதுபற்றி கூறியிருந்தேன். அரசாங்கம் பிள்ளையானின் ஆதரவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேச சபைகளை கைப்பற்றுவதற்கு இணக்கப்பாடுகளை எட்டியதால் அவரை காப்பாற்றுவதற்காக இந்த விடயத்தை அலட்சியப்படுத்துகிறதா, என்றும் தெரியவில்லை. அவ்வாறு இருக்காது என்று நம்புகின்றேன். இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 26-11-2025 அன்று நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி, விவசாயம் மற்றும் கால்நடை ஆகியவற்றை பிரதானமாக கொண்டுள்ளது. மாரி காலத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு களுவங்கேணி – புண்ணக்குடாவை இணைக்கும் வகையில் பாலமொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். அதன்படி அந்த பாலத்தை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற மீன்பிடி துறை தொடர்பான அபிவிருத்தி கூட்டத்தில் பிரதி அமைச்சர் கலந்துகொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் சில கோரிக்கையை முன்வைத்திருந்தோம். ஆனால் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. இது அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துகிறது. வீக்கென்ட் லைட் கோரியிருந்தோம். நிதி ஒதுக்கியதாக கூறினாலும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கிழக்கில் கடல் வளங்களை நம்பி வாழும் மக்களை போன்று நன்னீர் மீன்பிடியை நம்பி வாழும் மக்களும் இருக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மீன் குளங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் மீன் குஞ்சு விடுவதற்காக 84 இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 40 இலட்சம் ரூபாவுக்கு மீன் குஞ்சுகளை மீனவர் சங்கம் வாங்கினால் அரசாhங்கம் 44 இலட்சம் ரூபா மானியத்தை வழங்கும்.
ஆனால், சங்கங்களிடம் இந்தளவு நிதி கிடையாது. 12 இலட்சம் ரூபாவே கைவசம் இருப்பதாக கூறுகின்றனர். கடற்றொழிலை நம்பி வாழும் மக்களுக்கும் சில பிரச்சினைகள் உள்ளன. அத்துடன் நன்னீர் மீன்பிடியை நம்பி வாழும் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. இதனால் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.
வாழைச்சேனை பிரதேசத்தில் தனி நபரொருவர் வேலி அமைத்து மீனவர்களுக்கு படகுகளை நிறுத்த முடியாதளவுக்கு நிலைமையை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டியிருந்தேன். முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் தம்பியே இந்த வேலியை அடைத்து வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் இதுபற்றி கூறியிருந்தேன்.அரசாங்கம் பிள்ளையானின் ஆதரவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேச சபைகளை கைப்பற்றுவதற்கு இணக்கப்பாடுகளை எட்டியதால் அவரை காப்பாற்றுவதற்காக இந்த விடயத்தை அலட்சியப்படுத்துகிறதா, என்றும் தெரியவில்லை. அவ்வாறு இருக்காது என்று நம்புகின்றேன். இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக மீன்படி சங்க தலைவர் ஒருவரை அபாண்டமான குற்றச்சாட்டில் கைது செய்திருந்தனர். நாங்கள் அவரை பிணையில் எடுத்துள்ளோம். மீனவர்களின் வாழ்க்கையை அழிக்க வேண்டாம் என்று கோருகின்றோம். இந்த தொழிற்றுறையை மேம்படுத்த மீனவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றார்.





