முதன்மை வர்த்தகப் பிரதிநிதியுடன் கலந்துரையாடிய அமெரிக்க தூதுவர்
முதன்மை வர்த்தகப் பிரதிநிதி கரி அருண் முதன்முறையாக இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 15-12-2025 அன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க முதன்மை வர்த்தகப் பிரதிநிதி கரி அருணுடன் 'தித்வா' சூறாவளியின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும் மீட்சிப்பணிகளில் அமெரிக்க நிறுவனங்களின் முக்கிய வகிபாகம் மற்றும் அவை ஆற்றிவரும் பணிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவும் இலங்கைக்குத் தொடர் உதவிகளை வழங்கிவரும் நிலையில், அந்நாட்டின் முதன்மை வர்த்தகப் பிரதிநிதி கரி அருண் முதன்முறையாக இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 15-12-2025 அன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவரது வருகை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இலங்கையில் 'தித்வா' சூறாவளியின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும் மீட்சிப்பணிகளில் அமெரிக்க நிறுவனங்களின் முக்கிய வகிபாகம் மற்றும் அவை ஆற்றிவரும் பணிகள் தொடர்பில் கரி அருணுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இலங்கையுடனான அமெரிக்காவின் வர்த்தகத்தொடர்புகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராய்ந்ததாக தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.





