நவம்பர் 3இல் யோஷித, டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான, வழக்குக்கு முன்னரான ஒன்றுகூடல்
தனது சேவைப்பெறுநர் சுகயீனமுற்றிருப்பதாக நீதிமன்றத்துக்கு அறிவித்த சட்டத்தரணி, அதற்குரிய மருத்துவ அறிக்கையினையும் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
பண சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின், வழக்குக்கு முன்னரான ஒன்றுகூடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு 28-09-2026 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கபுலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் 2 ஆவது பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள டெய்சி ஃபொரஸ்ட் மன்றில் முன்னிலையாகாத நிலையில், பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா மன்றில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது தனது சேவைப்பெறுநர் சுகயீனமுற்றிருப்பதாக நீதிமன்றத்துக்கு அறிவித்த சட்டத்தரணி, அதற்குரிய மருத்துவ அறிக்கையினையும் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
தொடர்ந்து சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஓஸ்வால்ட் பெரேரா விடயங்களை முன்வைக்கையில், “முதலாவது பிரதிவாதி, வழக்குத் தொடுனருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை மீளப்பெற்றுள்ளார்.
ஆகையால் இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான திகதியை நிர்ணயிக்குமாறு” மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.





