புதியதொரு அரசியல் சூழலிலும் வட, கிழக்கின் நிலைவரம் கவலை அளிக்கிறது: நோர்வே வெளிவிவகார அமைச்சர்
ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் ஆட்சி மாத்திரமல்ல. மாறாக அது சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதுமாகும்.
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின் பின்னர் புதியதொரு அரசியல் சூழல் உருவாகியிருப்பினும், நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான மட்டுப்பாடுகள் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களின் நிலைவரம் குறித்து மிகுந்த கரிசனை கொண்டிருக்கிறோம்.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி உள்ளிட்ட விவகாரங்களில் சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்பதில் நோர்வே உறுதியாக இருக்கிறது. உண்மை கண்டறியப்படுவது மாத்திரமே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என நோர்வே வெளிவிவகார அமைச்சர் எஸ்பன் பார்த் ஐடே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று ஒரு வருடகாலம் பூர்த்தியடைந்திருக்கும் பின்னணியில், இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பான சிறப்பு இடையீட்டு விவாதம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (26) நோர்வே பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட நோர்வே தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கம்ஷாயினி குணரத்னத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக நடைபெற்ற இவ்விவாதத்தில், இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரத்தை தொழிற்கட்சி எவ்வாறு மதிப்பிடுகிறது என்றும், இலங்கையில் வாழும் இன, மத சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கு நோர்வே எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது என்றும் கம்ஷாயினி குணரத்னத்தினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையுடனான நோர்வேயின் உறவு நீண்டகால மற்றும் நெருக்கமான வரலாற்றைக் கொண்டதாகும். நோர்வே பல தசாப்தங்களாக இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. போருக்குப் பின்னரான காலப்பகுதியில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து நாம் தொடர்ந்தும் தீவிர கரிசனை கொண்டிருக்கிறோம்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலும், அதன் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலும் இலங்கையில் புதியதொரு அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன. புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழல் ஒழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல் என்பன தொடர்பில் பல முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. நாம் இந்த மாற்றங்களை வரவேற்கிறோம்.
ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னமும் பல்வேறு சவால்கள் நீடிக்கின்றன என்பதை நாமறிவோம். குறிப்பாக, நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான மட்டுப்பாடுகள் என்பன பற்றிய தகவல்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றன. இதுகுறித்து நாம் இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக கலந்துரையாடியிருக்கிறோம்.
அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி உள்ளிட்ட விவகாரங்களில் சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்பதில் நோர்வே உறுதியாக இருக்கிறது. உண்மை கண்டறியப்படுவது மாத்திரமே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும்.
அதேவேளை இலங்கையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களுக்கு நோர்வே தொடர்ந்து ஆதரவு வழங்கிவருகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் இலங்கை எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் நோர்வே தொடர்ந்து ஆதரவளிக்கும்.
அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான விசாரணைகள் குறித்தும் நாம் கரிசனை கொண்டிருக்கிறோம். நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன ஒரு சமூகத்தின் நீண்டகால அமைதிக்கு மிக முக்கியமானவையாகும்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக, செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உண்மை கண்டறியப்படவேண்டும்.
இவ்வேளையில் இலங்கையின் முன்னேற்றங்களை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களுடன் இணைந்து நோர்வே உன்னிப்பாகக் கண்காணிக்கும். அதேவேளை இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் மாற்றங்கள் என்பன அங்கு வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்காதவண்ணம் இருப்பதை உறுதிசெய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் ஆட்சி மாத்திரமல்ல. மாறாக அது சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதுமாகும்.
நோர்வேயில் பெரும் எண்ணிக்கையான இலங்கைத் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த விவாதம் அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டாலும், அமைதியும் நல்லிணக்கமும் இன்னமும் முழுமையாக ஏற்படவில்லை. எனவே அங்கு மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து நாம் தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் குரலெழுப்பவேண்டும் என வலியுறுத்தினார்.





