அசோக்க ரன்வலவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து
தனது சேவைபெறுநர் இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்கத் தயாராக உள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.
சபுகஸ்கந்த பகுதியில் கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தி 6 மாத குழந்தை உட்பட மூவரைக் காயப்படுத்திய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக்க ரன்வலவின் சாரதி அனுமதிப்பத்திரத்தைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதாக மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவரமண்டிய - தெனிமுல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இரவு 7.45 மணியளவில், முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வல பயணித்த ஜீப் வாகனம், முன்னால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்தில் மோதியதுடன், எதிர் திசையிலிருந்து வந்த கார் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 மாதப் பச்சிளம் குழந்தை, குழந்தையின் தாய் (25) மற்றும் பாட்டி (55) ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
விபத்து சம்பவத்தையடுத்து கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல, கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவானின் உத்தரவுக்கமைய பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். விபத்துச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட பல உயர் அதிகாரிகள் கடமையைப் புறக்கணித்துள்ளமை விசாரணைகளின் போது நிரூபணமாகியுள்ளது.
விபத்தின் போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியமை மற்றும் விசாரணைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பொலிஸார் இந்த விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (19) மஹர நீதிவான் நீதிமன்ற (இலக்கம் 2) மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இந்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காகச் சமூகமளிக்கவில்லை. அவருக்குப் பதிலாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி அகலந்த உக்கத்த, அசோக்க ரன்வல தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 76 ஆம் இலக்க நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதான வைத்திய அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது விபத்தில் காயம் ஏற்பட்டது சந்தேகநபருக்கா அல்லது முறைப்பாட்டாளர்களுக்கா என நீதவான் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த சபுகஸ்கந்த பொலிஸார், விபத்தில் பெண் ஒருவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது; சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் மற்றொரு பெண்ணும் சிகிச்சைகளை நிறைவு செய்துகொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தனர். சட்டத்தரணி அகலந்த உக்கத்த, மூன்று சாரதிகளின் தவறால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, எனினும் ஒருவரிடம் மாத்திரம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என வாதிட்டார்.
தனது சேவைபெறுநர் இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்கத் தயாராக உள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார். எனினும் பாதிக்கப்பட்டோர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர். மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சியங்களையும் பரிசீலனை செய்த நீதவான், சந்தேகநபரான அசோக்க ரன்வலவின் அனுமதிப்பத்திரத்தைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதாக உத்தரவிட்டிருந்தார்.
மேலும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவுடன் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் முன்னிலையாகி வைத்திய அறிக்கை ஒன்றைப் பெறுமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார். எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி இந்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் மஹர நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.





