விஜித பண்டார ஹேரத்தின் இராஜதந்திர நியமனம் நிறுத்தம்
ஆவண ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட போதிலும், வெளிவிவகார அமைச்சு இன்னமும் அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டுகள் காரணமாக விஜித பண்டார ஹேரத்தின் இராஜதந்திர நியமனத்தை பாராளுமன்றின் உயர் பதவிகளுக்கான குழு நிறுத்தியுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான இந்தக் குழு, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சை கோரியுள்ளது.
தனிப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டைச் சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் பயன்படுத்தியமை,கௌரவ தூதுவராக ஆள்மாறாட்டம் செய்தமை உட்பட உத்தியோகபூர்வ ஆவணங்களைத் திருத்தியமைத்தமை, ஏதிலி அந்தஸ்தின் கீழ் பெற்ற பிரித்தானிய குடியுரிமையை மறைத்தமை, சத்தியப்பிரமாணத்தின் கீழ் பாராளுமன்றை தவறாக வழிநடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
எனினும், ஆவண ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட போதிலும், வெளிவிவகார அமைச்சு இன்னமும் அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் வெறும் தவறான நடத்தை என்பதையும் தாண்டி, நேரடியாகக் குற்றவியல் மோசடி மற்றும் ஆவணத் திருட்டு பிரிவுகளின் கீழ் வருவதை குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், இந்தத் தாமதம் பொது நம்பிக்கையைக் குறைப்பதாகவும், அமைச்சு, விஜித பண்டார ஹேரத்தை பாதுகாப்பதாகத் தோற்றமளிப்பதாகவும் உயர் பதவிகளுக்கான குழு கவலை தெரிவித்துள்ளது.
ஊழலை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளதாகக் கூறும் இந்த சமயத்தில், வெளிவிவகார அமைச்சு தாமதமின்றிச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.





