ஹேமசிறி, பூஜித்த ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு மீண்டும் 18இல் விசாரணை
புதிய நீதிபதிகள் அமர்வு நியமிக்கப்படும் வரை வழக்கின் விசாரணைக்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தை கோரினார்.

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு 28-07-2025 அன்று நாமல் பலல்லே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து தெரிவித்தாவது, வழக்கை விசாரித்த மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதிபதி ஆதித்யா படபெந்திகே, தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதால், புதிய நீதிபதிகள் அமர்வை நியமிக்குமாறு புதிய தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
அதன்படி, புதிய நீதிபதிகள் அமர்வு நியமிக்கப்படும் வரை வழக்கின் விசாரணைக்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தை கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, வழக்கை செப்டம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டது.