22மற்றும் 23இல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்
அரசாங்கம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அதனை வெற்றி கொள்வது மாத்திரம் அரசாங்கத்தின் நோக்கமல்ல.
எதிர்க்கட்சிகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலம் போதாது என எதிர்க்கட்சிகள் கருதினால் மற்றொரு தினத்தையும் வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அதனை வெற்றி கொள்வது மாத்திரம் அரசாங்கத்தின் நோக்கமல்ல. விவாதத்தின் போது பல விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக நாம் இதனைப் பயன்படுத்திக் கொள்வோம் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 13-01-2026அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இடம்பெற்ற மற்றும் இடம்பெறவுள்ள மாற்றங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிரச்சினைகளை எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் போது தீர்த்துக் கொள்ள முடியும்.
எதிர்க்கட்சிகள் விரைவில் அதனை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கமைய இம்மாதம் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கான விவாதத்தை முன்னெடுப்பதற்கான நேரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரு நாட்கள் விவாதத்துக்கு நாம் தயாராகவுள்ளோம். இரு நாட்கள் விவாதத்துக்கு போதாது எனில் மேலும் நாட்களை வழங்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளது. விவாதத்தின் போது உண்மையான யதார்த்தங்களை எம்மால் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த முடியும்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். அரசாங்கம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அதனை வெற்றி கொள்வது மாத்திரம் அரசாங்கத்தின் நோக்கமல்ல. விவாதத்தின் போது பல விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக நாம் இதனைப் பயன்படுத்திக் கொள்வோம்.
உண்மைகளை வெளிப்படுத்தி, எதிர்க்கட்சிகள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம் என்றார்.





