ஏற்றுமதி போட்டிக்கு தீர்வுகாணுங்கள்: சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்து
நாம் எம்முடன் போட்டியிடும் நிலையில் உள்ள ஏனைய ஆசிய நாடுகளின் உற்பத்தி நிலைவரம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவேண்டும்.
அமெரிக்காவினால் இலங்கைக்கான தீர்வை வரி 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பினும், எதிர்வருங்காலங்களில் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது ஆசிய நாடுகளுக்கு மத்தியில் உருவாகக்கூடிய போட்டித்தன்மை தொடர்பில் கவனம்செலுத்தி, நாடு என்ற ரீதியில் ஒருமித்து செயலாற்றி, சவால்களை வெற்றிகொள்ளவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமைத்துவத்தில் இயங்கிவரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கைக்கான தீர்வை வரி 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதனை நாட்டின் தற்போதைய நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு நோக்குகையில் குறிப்பிடத்தக்களவு நிவாரணமாகக் கருதமுடியும். இருப்பினும் எதிர்வருங்காலங்களில் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது ஆசிய நாடுகளுக்கு மத்தியில் உருவாகக்கூடிய போட்டித்தன்மை தொடர்பில் கவனம்செலுத்தி, நாடு என்ற ரீதியில் ஒருமித்து இயங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே இவ்விடயத்தில் எதிர்வருங்காலங்களில் ஏற்படக்கூடிய சவால்களின்போது ஒருமித்துக் கலந்துரையாடி, தீர்வுக்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடமும், பொருளாதாரத்துடன் தொடர்புடைய கொள்கைகளை வகுக்கும் தரப்பினரிடமும், தனியார்துறையினரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.
இதன்போது நாம் விடேச அவதானம் செலுத்தவேண்டிய பல துறைகள் இருக்கின்றன. இலங்கையின் உற்பத்தித்துறையானது மிகக்குறைந்தளவிலான செயற்திறனையே கொண்டிருக்கிறது. அதேபோன்று மின்கட்டணம் மிக உயர்வாகக் காணப்படுகிறது. கைத்தொழிற்துறை வலுவிழக்கக்கூடிய நிலையில் உள்ள போதிலும், உலகளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையான விடுமுறைகளைக்கொண்ட நாடாக இலங்கை இருக்கிறது.
அதுமாத்திரமன்றி துறைமுகம், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய துறைகளால் அடிக்கடி முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களினால் நாட்டின் உற்பத்தித்துறை மிகமோசமான சவாலுக்கு முகங்கொடுத்திருக்கிறது.
எனவே நாம் எம்முடன் போட்டியிடும் நிலையில் உள்ள ஏனைய ஆசிய நாடுகளின் உற்பத்தி நிலைவரம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவேண்டும். அதனை அடிப்படையாகக்கொண்ட புதிய நிலைமாற்றமொன்றுக்குள் பிரவேசிக்காமல், நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரம் தற்போது முகங்கொடுத்திருக்கும் தீவிர சவாலை வெற்றிகொள்ளமுடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





