நீதித்துறை சம்பந்தமாக சபாநாயகரிடத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை
நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக்கருதி இந்த விவாதத்தை நடத்த வேண்டுமெனக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் 23-06-2026 அன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
நீதித்துறையில் நிலவும் வெற்றிடங்கள், வழக்குத் தாமதங்கள் மற்றும் அவற்றிற்குக் காரணமாக அமைந்துள்ள கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது
நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக்கருதி இந்த விவாதத்தை நடத்த வேண்டுமெனக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் 23-06-2026 அன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
அதில் தற்போது நீதித்துறையில் நிலவும் வெற்றிடங்கள் காரணமாக, அந்த நிறுவனங்களின் பணிகளை வினைத்திறனாகவும், சுயாதீனமாகவும், முறையான வகையிலும் மேற்கொள்வதில் கடுமையான நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன் விளைவாக, வழக்குகள் தேங்குவதும் வழக்கு விசாரணைகள் தாமதமடைவதும் அதிகரித்துள்ளதுடன், மக்களுக்கு நீதியும் நியாயமும் உரிய காலத்தில் கிடைக்காதிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க நெருக்கடியாக மாறியுள்ளது. இந்தச் சூழ்நிலையானது நீதித்துறைக் கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் மோசமாகப் பாதிப்பதுடன், இது படிப்படியாக ஒரு கடுமையான சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.
எனவே, இதனை மிகவும் அவசரமான மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயமாகக் கருதி, நீதித்துறையில் நிலவும் வெற்றிடங்கள், வழக்குத் தாமதங்கள் மற்றும் அவற்றிற்குக் காரணமாக அமைந்துள்ள கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தி, அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்மொழிகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





