திபெத்தில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 16 பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம்
காயமடைந்த 32 பேரில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், 21 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள திபெத் பிராந்தியத்தில் வியாழக்கிழமை இரவு 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் நாக்சு நகரின் அவசரகால மேலாண்மைப் பணியகத்தை மேற்கோள் காட்டி சீனாவின் அரசுச் செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
காயமடைந்த 32 பேரில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், 21 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை இரவு சுமார் 10.33 மணியளவில் (சர்வதேச நேரப்படி 14.33 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு திபெத்தில் உள்ள நாக்சு பகுதியில், மக்கள் தொகை குறைவாகவும் அதிக உயரத்திலும் அமைந்துள்ள ஒரு மாவட்டத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகச் சீன நிலநடுக்க வலைப்பின்னல் மையத்தின் (China Earthquake Networks Center) தரவுகள் தெரிவிக்கின்றன.





