வரவு, செலவுத் திட்டம் எதிர்காலத் தலைமுறையின் நலனைக் கருத்திற்கொண்டது -ஜனாதிபதி அநுர
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் ஏற்பாடு செய்த 'வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்' என்ற தலைப்பிலான கூட்டம் 26-11-2026 அன்று இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் எதிர்காலத் தலைமுறையின் நலனைக் கருத்திற்கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டையும் வீட்டையும் நிர்வகிப்பதற்கு நிதிக் கட்டுப்பாடு அவசியம் என்றும், உரிய நிதி முகாமைத்துவம் இல்லாவிட்டால் நாட்டைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் ஏற்பாடு செய்த 'வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்' என்ற தலைப்பிலான கூட்டம் 26-11-2026 அன்று இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான இச்சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நாட்டையும் வீட்டையும் நடத்திச் செல்வதற்கு உரிய நிதிக் கட்டுப்பாடு அவசியம். மக்களின் பணத்தைச் செலவிடும்போது அந்த செலவு எத்தகைய பயனை தரும் என்பதைப் பலமுறை ஆராய்கிறோம்.
நாட்டில் முன்னர் உரிய திட்டமிடல் இல்லாமல் டொலர் கடன்களைப் பெற்று பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் சில திட்டங்கள் நாட்டுக்குப் பொருளாதாரப் பயனைத் தருவதற்குப் பதிலாகக் கடன் சுமையையும் நட்டத்தையும் ஏற்படுத்தின. மத்தள சர்வதேச விமான நிலையம் இதற்கு ஓர் உதாரணமாகும். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமும் பெருமளவு நட்டத்தைச் சந்தித்துள்ளது. இவ்வாறான திட்டங்களுக்காகப் பொதுமக்களின் பணத்தையும் வெளிநாட்டுக் கடன்களையும் பயன்படுத்தியதன் விளைவுகளை நாடு இன்றும் சுமக்கிறது.
முடிந்தவரையில் அனைவருக்கும் கொடுப்பனவுகளை வழங்கியுள்ளோம். ஆனால், இன்னும் கொஞ்சம் கத்தினால் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றிவிடலாம் என சிலர் நினைக்கின்றனர். அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அவற்றை மக்களின் பொதுப் பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலைக்குக் கொண்டுசெல்லும் வகையில் வரவு செலவுத் திட்டத்துக்கு மேலதிக அழுத்தத்தைக் கொடுக்கப் பார்க்கின்றனர். மக்களைத் தூண்டிவிட்டு நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அரசாங்கத்தைக் கைப்பற்றலாம் எனச் சிலர் கருதுகின்றனர். அரசியல் கட்சிகளின் பெயரைக் கூறி மக்களை அழைத்தால் மக்கள் திரண்டு வரமாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். அதனால் தற்போது மதத்தை முன்னிறுத்தி மக்களை அணிதிரட்டுவதன் மூலம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளைப் பொய்யாகத் தூண்டி மக்களின் பிரச்சினையாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். உண்மையில் மக்களுக்குப் பிரச்சினை இல்லை; அரசியல் கட்சிகளுக்கே பிரச்சினை உள்ளது
அரச சேவைக்காகப் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தைப் பலரும் அரசியல்வாதிகளுக்கான திட்டம் என விமர்சிக்கின்றனர். ஆனால், அந்த வாகனங்கள் அரச சேவையின் தேவைகளுக்காகவே கொள்வனவு செய்யப்படுகின்றன. அவற்றை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.
அரச சேவைக்காகக் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டால், அவர்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைப்போம். அரச சொத்துகள் அரச சேவைக்காகவும் மக்களின் தேவைகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.





