பண்டிகைக் காலத்தில் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது - அமைச்சர் வசந்த சமரசிங்க
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உலர் மிளகாயைத் தவிர ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியில் தடங்கல் ஏற்படாது எனவும், சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பொருட்களின் விலைகளை நியாயமற்ற வகையில் அதிகரித்தால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 24-11-2026 அன்று புறக்கோட்டை இறக்குமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிடைப்பனவு மற்றும் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் புறக்கோட்டை இறக்குமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தினோம். இந்தியாவில் நிலவும் எல் நினோ காலநிலைத் தாக்கம் இறக்குமதிப் பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் உலர் மிளகாயின் இறக்குமதி தொடர்பான பிரச்சினையே பிரதானமாக முன்வைக்கப்பட்டது. மிளகாயைத் தவிர ஏனைய அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் தடங்கலின்றி இறக்குமதி செய்து சந்தைக்கு விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் உறுதியளித்தனர்.
இந்தியாவில் எல் நினோ காலநிலைத் தாக்கம் மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக உலர்ந்த மிளகாயின் ஈரப்பதன் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நிலைமை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இலங்கையின் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளின்படி, இறக்குமதி செய்யப்படும் உலர்ந்த மிளகாயின் ஈரப்பதன் 12 சதவீதத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகக் காணப்படும் மிளகாயைச் சந்தைக்கு விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சில கொள்கலன்கள் துறைமுகங்களில் தேங்கியுள்ளன. இது மிளகாய்க்கான தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட பிரச்சினையல்ல் ஈரப்பதன் அளவு தொடர்பான தரநிலையைப் பூர்த்தி செய்ய முடியாமையே காரணமாகும்.
இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலக் கொள்கலன்களில் ஈரப்பதன் 13 முதல் 14 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் நடைமுறைப்படுத்தக்கூடிய இடைக்கால இணக்கப்பாடொன்றை எட்டுவது அவசியமாகியுள்ளது. ஈரப்பதனைக் கட்டுப்படுத்தி, 12 சதவீதத்துக்குக் குறைவான அளவில் மிளகாயை நுகர்வோருக்கு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளையும் நுகர்வோர் நலன்களையும் கருத்திற்கொண்டு இதற்கான தீர்வு ஆராயப்படும்.
எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் சில பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று சந்தைகளிலிருந்தும் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் தட்டுப்பாடு அல்லது விநியோகத் தாமதத்தைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் நியாயமற்ற வகையில் விலைகளை அதிகரிக்க அனுமதிக்க முடியாது. கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் விலைகள் தீர்மானிக்கப்படுவதில் ஆட்சேபனையில்லை. எனினும், நுகர்வோரைச் சுரண்டி அதிக இலாபம் ஈட்ட முயன்றால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் நுகர்வோர் அலுவல்கள் பேரவை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். தேவையேற்பட்டால் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட தலையீடுகளும் மேற்கொள்ளப்படும். நியாயமான இலாபத்துடன் விலைகளைத் தீர்மானிக்குமாறு வர்த்தகர்களிடம் கோரியுள்ளோம்.
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு உருளைக்கிழங்கு, வெங்காய அறுவடைகள் நிறைவடைந்துள்ளதால் தற்போது இறக்குமதிப் பொருட்களே சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் புதிய அறுவடைகள் கிடைக்கும் காலம் ஆரம்பித்துள்ளதால், எல் நினோ தாக்கம் தீவிரமடைந்து உற்பத்தியைப் பாதிக்காத பட்சத்தில் உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் விலைகள் மேலும் குறையக்கூடும் என்றார்.





