கடைகளில் அதிகரிக்கும் குற்றங்களை ஒடுக்கக் கூடுதலாக 12 காவலர்களை நியமிக்கிறது மானிடோபா அரசு
பிராண்டன் காவல்துறையின் புதிதாக உருவாக்கப்பட்ட பொதுப் பாதுகாப்புப் பிரிவில் நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
கனடாவின் மானிடோபா மாகாணம் முழுவதும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கூடுதலாக எட்டு ஆர்சிஎம்பி காவல் அதிகாரிகளும், பிராண்டன் நகரில் நான்கு காவல் அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.
மாகாணம் முழுவதும் நியமிக்கப்படும் எட்டு ஆர்சிஎம்பி அதிகாரிகளும், காவல்துறையின் பொதுப் புலனாய்வுப் பிரிவில் பணியமர்த்தப்படுவார்கள். வழக்கமான ரோந்துப் பணிகளின் வரம்பைத் தாண்டிச் செல்லும் விரிவான குற்றப் புலனாய்வுகளை மேற்கொள்வதே இப்பிரிவின் முக்கியப் பணியாகும் என்று திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பிராண்டன் காவல்துறையின் புதிதாக உருவாக்கப்பட்ட பொதுப் பாதுகாப்புப் பிரிவில் நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களைக் குறிவைத்துச் செய்யப்படும் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் இவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்றும் மாகாண அரசு தெரிவித்துள்ளது.





