நவதாராளவாதக் கொள்கையை அரசாங்கம் முன்னெடுக்கிறது - முன்னிலை சோசலிச கட்சி
மக்கள் எழுச்சியை எதிர்பார்த்தே அரசாங்கம் அடக்குமுறை இயந்திரத்தைப் பலப்படுத்துகின்றது.
நவம்பர் வீரர்களின் சோசலிச இலட்சியத்தை கைவிட்டு, நவதாராளவாத பொருளாதார மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிடவும் ஆபத்தான அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டினார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் 37ஆவது நவம்பர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு 13-11-2026அன்று யக்கல நகர சபை மண்டபத்தில் 'உயிரைத் துச்சமெனக் கருதிப் போராடிய தலைமுறையின் கனவு சோசலிசம்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. இதில் நினைவுப் பேருரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1988 – 1989ஆம் ஆண்டுகளில் உயிரைத் துச்சமெனக் கருதிப் போராடிய தலைமுறையின் கனவு சோசலிசமாகும். ரோஹண விஜேவீர உள்ளிட்ட பலர் உயிர்த்தியாகம் செய்த அந்தத் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியே இன்று ஆட்சியில் உள்ளது. எனினும், அந்த வரலாற்றைப் புறக்கணித்து சோசலிசத்துக்கு முரணான பொருளாதாரக் கொள்கையை முன்னெடுப்பது துயரமானது.
1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியிலிருந்து இன்றுவரை சோசலிசத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் தேவை முடிவடையவில்லை. ஸ்பார்டகஸ், கார்ல் மார்க்ஸ், லெனின், ரோஹண விஜேவீர, கமநாயக்க, இடமேகம, இரேஷா பொல்கம்பல உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராளிகளின் அர்ப்பணிப்புக்குப் பின்னால் இருந்த இலட்சியம் சோசலிசமாகும்.
1977ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை உள்நாட்டுத் தொழில்துறைகளைப் பாதித்து, அரச துறையைப் பலவீனப்படுத்தியது. 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1980ஆம் ஆண்டு வேலைநிறுத்தம் ஒடுக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு தேர்தல் பிற்போடப்பட்டதுடன், 1983ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட மூன்று கட்சிகள் தடை செய்யப்பட்டன. அவசரகால சட்டமும் அரச ஒடுக்குமுறையும் தொடர்ந்தன.
இன்றைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கும் இந்திய, அமெரிக்க நலன்களுக்கும் சார்பாகச் செயற்படுகின்றது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வரிச்சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகள் இல்லை. வரிச்சலுகைகள் பெரும் செல்வந்தர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் ஜனநாயகக் கருத்துகளுக்கு முரணாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதாகக் கூறியவர்கள், அதைவிட ஆபத்தான பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் பொதுச் சொத்துக்கள் தொடர்பான குற்றங்கள் சட்டமூலம் ஆகியவற்றைக் கொண்டுவந்துள்ளனர். மக்கள் எதிர்ப்பால் அரசாங்கம் பின்வாங்க நேரிட்டது. புதிய சட்டங்கள் பொலிஸ், இராணுவத்துக்கு எதேச்சதிகார அதிகாரங்களை வழங்குவதுடன், நீதித்துறையின் அதிகாரங்களையும் நிறைவேற்றுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அபாயமுள்ளது.
மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சிறுவர்கள் போசாக்கின்மையாலும் பெருந்தோட்டப் பெண் பிள்ளைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் அயடின் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துத் தட்டுப்பாட்டால் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்கின்றனர். சம்பளத்தால் அன்றாடத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியவில்லை.
மக்கள் எழுச்சியை எதிர்பார்த்தே அரசாங்கம் அடக்குமுறை இயந்திரத்தைப் பலப்படுத்துகின்றது. ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி, மக்கள் எழுச்சியைச் சோசலிச வெற்றியாக மாற்றுவதே நவம்பர் வீரர்களுக்கு வழங்கும் உண்மையான கௌரவமாகும் என்றார்.





