சிறார்களுக்கு போசாக்கு கிடைத்தால் உரிமைகள் பாதுகாக்கப்படும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2026 மே மாதத்திற்கு நபர் ஒருவரால் 30 நாட்கள் வாழ்வதற்கு 17,315ரூபா போதுமானது என்று தெரிவித்திருக்கின்றது.
பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் பெற்றோர்களின் ஜீவனோபாயத்தை பலப்படுத்த வேண்டும். நாட்டின் சிறார்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உரிய போசாக்கு கிடைத்தால் மாத்திரமே அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-08-2026 அன்று இடம்பெற்ற பெண்கள், இளம் வயதினர் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டம் மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் பிள்ளைகளின் நலனுக்காக எடுத்துள்ள தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியும் அனுமதியையும் ஆதரவையும் நல்குகின்றது. நமது நாட்டின் சிறார்கள் சந்ததிக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உரிய போசாக்கு கிடைத்தால் மாத்திரமே அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமும் அரசாங்கமும் அங்கீகரித்த பல புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும், இதன் மூலம் சிறார்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு பதிலாக, சிறுவர்கள், தாய்மார்கள் மற்றும் குடும்பத்தின் போசாக்கின்மைதான் அதிகரிக்கின்றது
பிள்ளைகளினது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் பெற்றோர்களின் ஜீவனோபாயத்தைப் பலப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு அரசாங்கம் தலையிட்டு மக்கள் முகங்கொடுக்கும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2026 மே மாதத்திற்கு நபர் ஒருவரால் 30 நாட்கள் வாழ்வதற்கு 17,315ரூபா போதுமானது என்று தெரிவித்திருக்கின்றது. உண்மையில் இது சாத்தியமற்ற விடயம். இவ்வாறான பிழையான தகவல்களின் அடிப்படையில் உருவாகும் புள்ளிவிபரங்களினால் பிள்ளைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமை மீறப்படுகின்றது. இது பிள்ளைகளுக்கும், தாய்மார்களுக்கும், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏன் ஒட்டுமொத்த 220 இலட்சம் மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.
தினமும் இந்த பாராளுமன்றம் கூடும் நாட்களில் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி பேசியதால், தற்போது அரசாங்கத்திற்கு இரக்கம் ஏற்பட்டு நெல்லைக் கொள்வனவு செய்ய, மேலதிக நிதிகளை ஒதுக்குவதற்கு நிதி பற்றிய குழுவின் அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
7.5 பில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது நல்ல விடயமாகும். என்றாலும் இது முழுமையான தீர்வாக அமையாது. நெல் கிலோவொன்றை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகும் நிலையில், அந்த உற்பத்திச் செலவை ஈடு கொடுக்கும் வகையில் நெல் கிலோவிற்கு நியாயமான விலையை பெற்றுக் கொடுக்கும் அதேவளை முறையான நெல் கொள்வனவு திட்டமொன்றும் அவசியமாகும் என்றார்.





