அநுரவின் அடக்குமுறைக்கு அடிபணியப்போவதில்லை - பொதுஜனபெரமுன
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதித்துறையையும் அரசாங்கம் ஆக்கிரமிக்கவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை. 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை புனித நகரமான அநுராதபுரத்தில் இருந்து ஆரம்பித்துள்ளோம். அரசாங்கத்துக்கு எதிரான சகல சக்திகளையும் ஒன்றிணைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கூட்டாக அறிவித்தனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 'மக்கள் போராட்டம்' 11-09-2026 அன்று அநுராதபுரம் நகரில் முன்னாhள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா இராமநாதன்,டி.வி.சானக, சானக மாதுகொட உட்பட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, டிரான் அலஸ், ரமேஸ் பதிரன, லக்ஸ்மன் யாப்பா, உட்பட பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களும், பொதுஜன பெரமுனவின் பொமுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தேசிய விவசாயத்துறை வீழ்ச்சியடைந்து விட்டது. அரசியல் வழிவாங்கள் தீவிரமடைந்துள்ளது.அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
மக்கள் மத்தியில் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக நாமல் ராஜபக்ஷ செயற்படுவதால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இது தற்காலிகமானவே நாமல் ராஜபக்ஷவை நிச்சயம் ஜனாதிபதியாக்குவோம்.அதற்கான பிரச்சாரத்தை அநுராதபுரத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில், அரசியலில் மாறுப்பட்ட கொள்கை காணப்பட்டாலும் ஏதேனும் பிரச்சினை என்றால் அனைவரும் ஒன்றிணைவோம். இந்த அரசாங்கம் புலிகள் அமைப்பின் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. அதனால் சிங்கள தேசியத்துக்கு எதிராக செயற்படுகிறது.
அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கினை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றுப்பட வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. நாங்கள் ஒன்றுப்பட்டால் மாத்திரமே சவால்களை எதிர்க்கொள்ள முடியும் என்றார்.
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உரையாற்றுகையில், ஊழல்வாதிகளை பிடிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி இந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளை முழுமையாக பாதுகாக்கிறார். அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதித்துறையையும் அரசாங்கம் ஆக்கிரமிக்கவுள்ளது. இது ஜனநாயகத்துக்கு மரண அடியாக அமையும் என்றார்.
பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உரையாற்றுகையில், நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எழுச்சியை தடுப்பதற்காகவே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்றுப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.





