ஜனவரி முதல் தனியார் துறை அடிப்படைச் சம்பளம் 30ஆயிரம்: தொழில் அமைச்சர் அனில் ஜயந்த
30,000 ரூபா என்பது தற்போதைய பணவீக்க நிலைமையில் போதுமானது அல்ல. சாதாரண வாழ்வுக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொகை அவசியமாகும்.

தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளமாக இருந்த 17,500 ரூபாவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் 27,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அந்த தொகை 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 22-07-2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலையாட்சகளின் வரவு செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச துறையினருக்கான சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டது. அதனுடன் தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து தொழிற்சங்கங்கள், நிறுவன பிரதானிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி எவ்வாறு தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பை செய்வது தொடர்பில் ஆராய்ந்தோம். இதன்போது தேசிய தொழிலாலளர் ஆலோசனை சபையை கூட்டியும் இது தொடர்பில் கலந்துரையாடினோம். அரச துறையினருக்கான சம்பள அதிகரிப்பை போன்று தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பை செய்ய முடிவு செய்தோம்.
தற்போது சம்பள விடயத்தில் ஊழியர் ஒருவரின் குறைந்த பட்ட சம்பளம் தொடர்பான சட்டத்திற்கமைய 17,500 ரூபாவே இருந்தது. இதனை 30,000 ரூபா வரையில் அதிகரிக்க கலந்துரையாடினோம். இவ்வேளையில் நிறுவன பிரதானிகள் ஒரே நேரத்தில் 30,000 சம்பளம் வரையில் அதிகரிப்பு செய்ய முடியாது என்றமையினால் இரண்டு கட்டங்களாக அதனை செய்ய இணக்கம் காணப்பட்டது. இதன்படி 27,000 ரூபா குறைந்த பட்ச சம்பளமாக ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும் வகையிலும், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அதனை 30,000 ரூபா வரையில் அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதனுடன் இணைந்ததாக இணைப்பு சட்டம் இரண்டு உள்ளது. அதில் 3500 ரூபா கொடுப்பனவு இணைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய தொழிலாளர் ஆலோசனை குழுவினால் 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் ஆககக் குறைந்த சம்பளத்திற்குள் அந்த கொடுப்பனவை உள்ளடக்க இணக்கம் காணப்பட்டது. இதற்கான அமைச்சரவை அனுமதியுடன் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை 30,000 ரூபா என்பது தற்போதைய பணவீக்க நிலைமையில் போதுமானது அல்ல. சாதாரண வாழ்வுக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொகை அவசியமாகும். எவ்வாறாயினும் பொருளாதாரத்தை நிலையாக்கி, உற்பத்திகளை பெருக்கியே அதனை செய்ய முடியும். இதன்படி உற்பத்திகளை அதிகரித்து கொள்ள ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலேயே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை அழைத்து வந்து பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தும் வேலைத்திட்டங்கள் வேகமாக நடக்கின்றன.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. அதில் ஒன்றாக அமெரிக்காவின் வரி இருந்தது. அதனையும் பேச்சுவார்த்தைகள் மூலம் குறைத்துக்கொள்ள முடியுமாக இருந்தது. மேலும் குறைத்துக்கொள்ள நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்றார்.