ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட ஐ.ம.சவின் செயற்குழுவில் இணக்கம்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கே செயற்பட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட சஜித் பிரேமதாசவினால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளுக்கு கட்சியின் செயற்குழுவில் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் 8 ஆவது நிறைவேற்றுத் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி அகிய இரண்டு கட்சிகளுக்கிடையில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முறை தொடர்பில் நீண்ட நேரம் ககலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் சிலர் அண்மையில் சந்தித்து கலந்துரையாடி இருந்தது. அந்த கலந்துரையாடலின்போது சஜித் பிரேமதாசவினால் முன்மொழியப்பட்ட விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டன.
அதன் பிரகாரம் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட முன்மொழியப்பட்ட பிரேரணைகளுக்கு கட்சியின் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி சமர்ப்பித்தவிடயங்களுக்கமைய சில பிரேரணைகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இரண்டு கட்சிகளாலும் சமர்ப்பிக்கபடப்ட பிரேரணைகளை செயற்படுத்தவும் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் தெரிவிக்கப்பட்டிருந்த பிரேரணைகளை செயற்பாடுக்கு கொண்டுவரவரும் இரண்டு கட்சிகளின் தலைவர்களின் அனுமதியுடன் குழுவொன்றை நியமிக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்துக்கு இணக்கம் ஏற்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடவும் கட்சியின் செயற்குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கே செயற்பட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக 2019ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் என்ற பிரேரணைக்கு அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மற்றும் பிரதமராக இருந்த சந்தர்ப்பத்திலும் ஒரு அடி பின்னுக்கு சென்று சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்டது கட்சியின் பாதுகாப்புக்காகும் என்பதை நனைவுபடுத்த விரும்புகிறேன்.
அதேபோன்று ரணில் விக்ரமசிங்க எந்த சந்தர்ப்பத்திலும் கட்சியின் பாதுகாப்புக்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திறம் தொடர்பாகவும் சிந்தித்தே செயற்பட்டுள்ளார். எவ்வாறு இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கு எந்த தடைகளும் இல்லை.
இரண்டு கட்சிகளிலும் ஒரே கொள்கையை பின்பற்றுகின்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்வதால், அந்த ஒற்றுமையை முன்னெடுத்து செல்வதற்காக எந்த தடைகளும் ஒருபோதும் தலைதூக்கப்போவதில்லை. தலைமைத்துவம் தொடர்பாகவும் பிரச்சினை எழப்போவதில்லை என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயல்படுகின்றன என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என்றார்.





