அரச உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு ஏன் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை: சாணக்கியன் எம்.பி கேள்வி
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்துக்கு அனுமதி வழங்கிய அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆணைக்குழுவின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-10-2025 அன்று நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்துக்கு அனுமதி வழங்கிய அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு குறித்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் குறித்தும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது .இருப்பினும் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளபடவில்லை. ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமந்திரவின் தந்தைக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரையில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.