இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்விக்கான அமைச்சராக, பிரதமர் இந்திய தொழில்நுட்பக் கழகம் டெல்லி, மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, கல்வி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராயவுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயங்சங்கரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றடைந்தார். சீனாவுக்கான விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பியவுடனேயே பிரதமர் ஹரிணி இந்தியா சென்றுள்ளார்.
டெல்லி சென்றடைந்த பிரதமரை, இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்னே மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர். இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்கவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மேலும் பல சிரேஷ்ட இந்திய அரசியல் தலைவர்களுடன் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
அந்த வகையில் 16-10-2025 அன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும், கல்வி மற்றும் ஆளணி அபிவிருத்தியில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக ஜெய்சங்கர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
17-10-2025சனிக்கிழமை வரை இந்தியாவில் தங்கியிருக்கும் பிரதமர் ஹரிணி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தவுள்ளார். அத்துடன், இன்று இடம்பெறவுள்ள புகழ்பெற்ற இந்தியச் செய்தி ஊடக நிறுவனமான நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட் மூலம் ஏற்பாடு செய்யப்படும் ஒரு உலகளாவிய உச்சி மாநாடு - 2025இல் பங்கேற்கும் பிரதமர் அதில் முக்கிய உரையை ஆற்ற உள்ளார். இந்த மாநாடானது உலகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து, தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்க வழிவகுக்கும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்விக்கான அமைச்சராக, பிரதமர் இந்திய தொழில்நுட்பக் கழகம் டெல்லி, மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, கல்வி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராயவுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் பழைய மாணவியான இலங்கைப் பிரதமர், இந்த விஜயத்தின் போது தனது பழைய கல்லூரிக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
அத்தோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வர்த்தக நிகழ்விலும் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஜயமானது, இலங்கை - இந்திய உறவுகளின் நீடித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு, இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மை மற்றும் சுபீட்சத்திற்காக ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.





