ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் - உதய கம்மன்பில
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை பதவி யில் வைத்துக் கொண்டு சுயாதீன விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: கேப்டன் இல்லாத கப்பல் போன்றே சகல சிறைச்சாலைகளும் இன்று நிர்வகிக்கப்படுகின்றன. ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரத்தில் முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய பதவி நீக்கப்பட்டார்.இவர் பதவி நீக்கப்பட்ட முறைமை சட்ட விரோதமானது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் அந்த தவறை அரசாங்கம் திருத்திக்கொள்ளவில்லை.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பதவி இன்றும் வெற்றிடமாகவே காணப்படுகிறது. தகைமை உள்ள ஒருவரை இந்த பதவிக்கு நியமிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும். சிறைச்சாலையில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் பதிவாகும் மரணங்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த காலங்களில் குறிப்பிட்டார்.ஆனால் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அமைதியாக இருக்கிறார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை பதவி யில் வைத்துக் கொண்டு சுயாதீன விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. நீதியமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடுவோம் என்றார்.





