அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் மனோகணேசன் முறைப்பாடு
தித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மீள்குடியேற்றத்திற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி தாமதம் பிரதான தடையாக இருகிறது.
தித்வா மீள்கட்டுமாணம் தொடர்பில் நீங்கள், இலங்கைக்கு பாதுகாப்பான நிலத்தை தெரிவு செய்வது எப்படி என்ற தொழில் நுட்ப உதவிகள் செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பான காணி இல்லை. நமது தித்வாவால் பாதிக்கப்பட்ட மலையக அகதிகளை இன்னும் கூடாரங்களில் அநுர அரசு வைத்துள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, மாவட்டங்களில் இந்நிலை தொடர்கிறது. ஆகவே உங்கள் உதவி வழங்கப்படும் வேளைகளில் மலையக மக்களுக்கு அது பயன்படுகிறதா என்பதை கண்காணியுங்கள் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வொர்த்திடம் கூறினார்.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய இல்லத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தூதுக்குழுவினருக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வொர்த்துக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோகணேசன், இரத்தினபுரி பிரதேச சபையின் உப தவிசாளர், ஜ.ம.மு. சிரேஷ்ட உபதலைவர் சந்திரகுமார், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான உப தலைவர் பாரத் அருள்சாமி, மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வர்த், துணை உயர்ஸ்தானிகர் ரூத் பைர்ட், அரசியல் அதிகாரி மெத்தியூ லார்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த சந்திப்பு சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தை பலப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவிற்காக, கூட்டணி தூதுக்குழுவினர் தமது நன்றியை தெரிவித்து கொண்டனர்.
தித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மீள்குடியேற்றத்திற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி தாமதம் பிரதான தடையாக இருகிறது.
டிஜிட்டல் வரைபடமாக்கல் மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா வழங்கும் ஆதரவானது, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த உதவும் மிக முக்கிய பங்களிப்பாகும்.
இந்த பங்களிப்பு எமது மக்களுக்கு உதவி அவர்களது மீள்குடியேற்றத்துக்கு உதவுகிறதா என கண்காணியுங்கள் என மனோ கணேசன் தலைமையிலான தூத்துகுழு, அவுஸ்திரேலிய தரப்பை கேட்டு கொண்டது என்றுள்ளது.





