நான் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தேன் - பாதுகாப்புச் செயலாளர்
இன்னும் இரண்டு அல்லது இரண்டரை மாத காலப்பகுதிக்குள் அதற்குத் தேவையான நடைமுறைகளைப் பூர்த்தி செய்து, இராணுவம் மற்றும் காவல்துறையினரை அங்கு அனுப்ப முடியும் என எதிர்பார்க்கிறோம்.
தான் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனப் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு 02-05-2026 அன்று விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களுக்குச் சென்று வழிபாடுகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
கேள்வி: ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் மீண்டும் இலங்கை இராணுவத்தினர் இணைந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?
பதில்: ஆம், அதற்கான வாய்ப்புகள் மீண்டும் கிடைத்துள்ளன. குறிப்பாக ஹைட்டி நாட்டுக்கு அமைதிப் படைப் பணிகளுக்காக இலங்கைப் படையினரை அனுப்புவது குறித்து விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு அல்லது இரண்டரை மாத காலப்பகுதிக்குள் அதற்குத் தேவையான நடைமுறைகளைப் பூர்த்தி செய்து, இராணுவம் மற்றும் காவல்துறையினரை அங்கு அனுப்ப முடியும் என எதிர்பார்க்கிறோம்.
கேள்வி: நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
பதில்: நீண்டகாலமாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மிகவும் சுதந்திரமாக நடைபெற்று வந்தது. இதற்குப் பல தரப்பினரின் ஆசீர்வாதமும் அழுத்தங்களும் பின்னணியாக இருந்தன. ஆனால் இப்போது அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், அதை நாட்டிலிருந்து ஒழிக்கவும் முப்படையினரும், குறிப்பாகக் கடற்படையினரும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர். இதற்குத் தேவையான தீர்க்கமான முடிவுகளை நாம் எடுத்துள்ளோம். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை இராணுவம் வழங்கி வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினரை நாம் படிப்படியாகக் கைது செய்து வருகிறோம். இது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன. இந்தக் கடத்தல்களின் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்கள் மற்றும் இந்த வியாபாரத்தில் ஈடுபடும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
கேள்வி: வெளிநாடுகளில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல் புள்ளிகளைக் கைது செய்ய முடியுமா?
பதில்: வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் கடத்தல்காரர்களும் கைது செய்யப்படுவார்கள். அவர்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு உட்பட்டே நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
கேள்வி: அரசாங்கத்தின் 2.5 பில்லியன் டொலர் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் உங்களின் பங்களிப்பு உள்ளதா?
பதில்: இல்லை, அது தொடர்பான விசாரணைகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது தனிப்பட்ட முறையில் வேறொரு பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: இராணுவத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: இராணுவ ஆளணி குறைவடைந்துள்ளதை நாமும் உணர்ந்துள்ளோம். இருப்பினும், இதனை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கான தந்திரோபாயத் திட்டங்களை நாம் வைத்துள்ளோம். அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகள் அமையும்.
கேள்வி: நீங்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்களா?
பதில்: இல்லை, நான் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மையற்றது என்றார்.





