அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றமத்தால் நிராகரிப்பு
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் எனத் தெரியாத இக்கட்டான நிலையிலேயே ஜனாதிபதி இதனைப் பிறப்பித்தார்.
'தித்வா சூறாவளி அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றம் 26-02-2026 அன்று உத்தரவிட்டது.
நீண்ட நேரக் கருத்தாய்வுகளுக்குப் பின்னர், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியது.
கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளை சவாலுக்கு உட்படுத்தி, சட்டத்தரணி ஆதம் லெப்பை ஆசாத் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே திருத்தத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த ஒழுங்குவிதிகள் வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும், இந்த விதிகளின் கீழ் பொலிஸாரினால் எவ்வித கைதுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க விதித்த அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் சட்டவிரோதமானவை என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட அதே சட்டவிரோத அம்சங்களே தற்போதைய ஒழுங்கு விதிகளிலும் உள்வாங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதம நீதியரசர், இந்த ஒழுங்குவிதிகள் அனர்த்த காலத்திலேயே விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என வினவினார். அதற்குப் பதிலளித்த சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, இந்த ஒழுங்குவிதிகள் மூலம் தனிநபர்களைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் படையினருக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கும் மட்டுப்படுத்தப்படாத அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தான நிலைமையாகும் எனக் குறிப்பிட்டார்.
மற்றொரு மனுதாரரான சட்டத்தரணி ஆதம் லெப்பை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி திஷ்ய வேரகொட, இந்த விதிகளின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை என சட்டமா அதிபர் கூறுகிறார். ஆனால், 'அனித்தா' பத்திரிகை இச்சட்டத்தின் கீழ் 57 சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்துவதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் ஊடகங்கள் வாயிலாகக் கோரியுள்ளார். இது பாரிய அச்சுறுத்தலாகும் என்றார்.
இதன்போது மன்றில் மீண்டும் விளக்கமளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, தித்வா சூறாவளியினால் நாட்டுக்கு 13.3 டிரில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் எனத் தெரியாத இக்கட்டான நிலையிலேயே ஜனாதிபதி இதனைப் பிறப்பித்தார். இதில் அடிப்படை உரிமை மீறல்கள் ஏதும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார்.
அதற்கமைய மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் அமர்வு, இந்த மனுக்களின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை மேலோட்டமாக கூட உறுதிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டு, மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்வதாக நேற்றைய தினம் அறிவித்தது.





