தமிழக எதிர்க்கட்சித்தலைவருடன் தமிழ்த்தேசிய பேரவையினர் சந்திப்பு
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
தமிழக அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்களின் ஓரங்கமாக தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கலந்துரையாடியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வு என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழர அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர்.
அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது ஐக்கிய அரசியலமைப்பு நிராகரிப்பு, சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கம், மீனவர் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களில் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் பரந்துபட்ட விவரங்களை உள்ளடக்கிய கடிதம் ஒன்றும், மீனவர் பிரச்சினைக்கான தீர்வு குறித்த கடிதம் ஒன்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கையளிக்கப்பட்டது.





