சுகாதார துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது - வைத்தியர் சமல் சஜீவ
தமக்கு சாதகமான சிறிய குழுக்களுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் காணமுடிகிறது. அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். வைத்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வைக்காணாது, அரசாங்கம் தனது கட்சிக்கு ஆதரவான வைத்தியர்களை தொழிற்சங்கங்களுக்குள் புகுத்தி, சுகாதார தனது முழுமையான அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறதெனன மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஜீவ குற்றம் சுமத்தியுள்ளார்.
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்புத் தொடர்பில் 02-04-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நீண்ட காலமாகியும் இதுவரை முறையான தேசிய சுகாதாரக் கொள்கையையோ அல்லது மருந்துக் கொள்கையையோ அறிவிக்கவில்லை. சுகாதார அமைச்சின் உயர் பதவிகளில் இன்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகளே பணியாற்றி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் முறையற்ற மருந்து கொள்முதல் மற்றும் விலைமனு கோரல் மோசடிகளுக்குத் துணைபோன அதிகாரிகளே தற்போதைய அமைச்சரின் கீழும் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர்.
அமைச்சருக்கும் பிரதி அமைச்சருக்கும் இத்துறை சார்ந்த ஆழமான புரிதல் இல்லை. மோசடிக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளனர். வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நெருக்கடிக்கு சுகாதார அமைச்சின் முறையற்ற நிர்வாகமே பிரதான காரணமாகும். அரசாங்கம் தனது கட்சிக்கு ஆதரவான வைத்தியர்களை தொழிற்சங்கங்களுக்குள் புகுத்தி, சுகாதாரத்துறையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. உண்மையான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாட ஜனாதிபதியும் சுகாதார அமைச்சரும் தயக்கம் தெரிவிக்கின்றனர்.
தமக்கு சாதகமான சிறிய குழுக்களுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் காணமுடிகிறது. அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் மருந்தகங்களில் மருந்து விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் ஏழை நோயாளர்களே பாதிக்கப்படுகின்றனர். ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடுவது அவசியம். இல்லையெனில், சுகாதாரத்துறை முழுமையாக செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும். அரசியல் உள்நோக்கத்துடன் வைத்தியர்களையும் நோயாளர்களையும் மோதவிடுவதை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.





