மன்னார் தீவை வரைபடத்திலிருந்து அகற்றும் திட்டங்கள் வேண்டாம்: கொழும்பில் ஆர்ப்பாட்டம்
மணலில் உள்ள இல்மனைட் என்னும் கனிமவளத்துக்கு உலகளவில் கேள்வி நிலவி வரும் நிலையில், அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட உள்ள கனிமவள அகழ்வு பணி காரணமாக மன்னார் தீவுக்கு பாரிய சேதம் ஏற்படுமென மக்கள் விசனம் வெளியிட்டனர்.

இரு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மன்னாரில் இல்மனைட் கனிமவளங்களை அகழ அரசாங்கம் அனுமதி அளித்தமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியும் மன்னார் மக்கள் கொழும்பில் ஆர்ப்பாட்ட த்தை முன்னெடுத்திருந்தனர்.
இலங்கை வரைபடத்திலிருந்து மன்னார் தீவை அகற்றும் வகையில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கனிமவள அகழ்வு இடம்பெறபோவதாகவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
மன்னாரில் இல்மனைட் கணிமவள அகழ்வுக்கு அனுமதியளித்தமை, அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 19-09-2025 அன்று மன்னார் மக்கள் போராட்ட த்தை முன்னெடுத்திருந்தனர். இதில் மன்னார் பிரஜைகள் குழு, பொதுமக்கள் கவுன்சில் அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மத்திய நிலையம் ஆகியன கைகோர்த்திருந்தன.
போராட்டத்திற்காக மன்னாரிலிருந்து 6 பேருந்துகளில் மக்கள் வருகைத் தந்திருந்ததுடன் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் மணியளவில் நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணலில் உள்ள இல்மனைட் என்னும் கனிமவளத்துக்கு உலகளவில் கேள்வி நிலவி வரும் நிலையில், அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட உள்ள கனிமவள அகழ்வு பணி காரணமாக மன்னார் தீவுக்கு பாரிய சேதம் ஏற்படுமென மக்கள் விசனம் வெளியிட்டனர்.
மேலும் மன்னாரில் உள்ள மக்கள் மாத்திரமே மன்னாருக்கு உரிமை கோர முடியும், எம்மக்களுக்கு மன்னார் தீவு வேண்டும், மன்னார் தீவு எமது வாழ்க்கை அதை எம்மிடமிருந்து பறிக்காதீர், உங்களின் சுயலாபத்திற்காக எமது நிலத்தை விற்பனை செய்யாதீர் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் கோசமிடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் போராட்டக்கார்கள் முன்னோக்கிச் செல்வதை தடுப்பதற்காக பெருமளவான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.