கனடாவின் பிரம்டன் நகரிலும் 'விடுதலை நீர்' சேகரிப்பு நிகழ்வு
பிரம்டன் நகரபிதா உள்ளடங்கலாக அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், புலம்பெயர் தமிழர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கனடா, ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் நகரத்தில் அமைந்துள்ள தமிழின அழிப்பு நினைவக வளாகத்தில், கனேடிய தமிழர் தேசிய அவை அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 'விடுதலை நீர் சேகரிப்பு' நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
தமிழ் இனத்தின் விடுதலை உள்ளடங்கலாக தமிழ் அரசியல் கைதிகளின் விடியலுக்கான குறியீடாக இலங்கையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விடுதலை நீர் சேகரிப்பு நடவடிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதத்திலேயே பிரம்டன் நகரில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரம்டன் நகரபிதா உள்ளடங்கலாக அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், புலம்பெயர் தமிழர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்தோடு 'இனத்தின் பெயரால் வஞ்சிக்கப்பட்டு, இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளின் விடுதலைக்காக தமிழ் மக்களாகிய நாம் மெய்யுணர்வுகொண்டு உழைக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதன்படி தாயகத்தில் மாத்திரமன்றி, தமிழர்கள் செறிந்துவாழும் புலம்பெயர் நாடுகளின் ஒவ்வொரு நகர, மாநகர சபைகளிலும் இதுபோன்ற விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வை ஒரு நூதனக் கவனயீர்ப்புப் போராட்ட வடிவமாக முன்னெடுக்கவேண்டும்' எனவும் ஏற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.





