ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்
சங்கத்தின் தலைவராக இருந்த நீதிவான் பஸான் அமரசேனவின் திடீர் இராஜினாமாவைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு இலங்கை நீதிச்சேவை சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்பான இலங்கை நீதிச்சேவை சங்கம், இந்த வயதெல்லை நீடிப்புத் திட்டத்திற்குத் தனது ஏகமனதான எதிர்ப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 107(5) ஆவது உறுப்புரையைத் திருத்தி, உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்திற்குத் தங்களது சங்கம் உடன்படவில்லை என்பதை நீதிச்சேவை சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் அவசர விசேட பொதுக் கூட்டத்தில், கலந்துகொண்ட 65 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிவான்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இந்த ஓய்வு கால நீடிப்புக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்துள்ளனர்.
சங்கத்தின் தலைவராக இருந்த நீதிவான் பஸான் அமரசேனவின் திடீர் இராஜினாமாவைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த உத்தியோகபூர்வ கடிதமானது நீதிச்சேவை சங்கத்தின் பிரதி தலைவர் நீதிவான் சாமர விக்ரமநாயக்க மற்றும் செயலாளர் நீதிவான் சுரங்க முனசிங்க ஆகியோரின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 26,000க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கொழும்பு சட்டச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன இந்த அரசியலமைப்பு திருத்த நடவடிக்கை நீதித்துறை சுதந்திரத்தையும், அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் என எச்சரித்துக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளும் தற்போது இதில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





