திஸ்ஸ குட்டியராட்சி நீதிவான் முன்னிலையில் பொய்யுரைத்ததற்கு கவலை
இந்த வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட் போது தான் பொய்யுரைத்ததாக திஸ்ஸ குட்டியராட்சி நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டு கவலை தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மோல்டாவா நாட்டில் 5 பில்லியன் டொலர் நிதி முதலீடு செய்ததாக குறிப்பிட்ட விடயம் முற்றிலும் பொய்யானது என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சி நீதிவான் முன்னிலையில் குறிப்பிட்டு, அடிப்படையற்ற வகையில் பொய்யுரைத்ததற்கு கவலை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சிக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தாக்கல் செய்த அவதூறு வழக்கு 29-07-2025 அன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
2023.10 மாத காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான திஸ்ஸ குட்டியாட்சி தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது போலியான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். 'மக்கள் விடுதலை முன்னணியின் வங்கி கணக்குக்கு வெளிநாடுகளில் இருந்து பல பில்லியன் டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 5 பில்லியன் டொலரை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மோல்டாவா நாட்டில் முதலீடு செய்துள்ளதாக திஸ்ஸ குட்டியராட்சி குற்றச்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2023.10.13 ஆம் திகதியன்று திஸ்ஸ குட்டியராட்சிக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட் போது தான் பொய்யுரைத்ததாக திஸ்ஸ குட்டியராட்சி நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டு கவலை தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்கு எதிராகவும் அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.அனைத்து பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு காண்போம் என்றார்.