வரி குறித்த சர்ச்சைக்கு வி.எப்.எஸ். குளோபல் நிறுவனம் விளக்கம்
உலகளவில், வி.எப்.எஸ். நிறுவனமானது தனது அனைத்து வாடிக்கையாளர் அரசாங்கங்களுடனும் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆழமாக உறுதிபூண்டுள்ளதுடன், அதற்கமைய இலங்கையின் உரிய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு நல்லெண்ணத்துடன் முழுமையாக இணங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
 
        
உலகளாவிய விசா செயலாக்க சேவை நிறுவனமான வி.எப்.எஸ்., இணையவழி விசா வழங்கும் முறை தொடர்பான சிறப்பு கணக்காய்வுக்காக தேவைப்படும் முழுமையான ஒத்துழைப்பையும் தகவல்களையும் வழங்குவதாக கடந்த ஆண்டு நவம்பரில் கணக்காய்வு தலைமை அலுவலகத்துக்கு அறிவித்ததாக தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையவழி விசா வழங்கும் முறை குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை பற்றி அண்மையில் வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு வி.எப்.எஸ். நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஜி.பி.எஸ். தொழிநுட்ப சேவை அன்ட் ஐ.வி.எஸ். குளோபல் எப்.இசட்.கோ, வி.எப். வோல்ட் வைட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் என்பன இலத்திரனியல் வீசா மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக 2023 டிசம்பர் 21ஆம் திகதி ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கமைய, வி.எப்.எஸ். குளோபல் நிறுவனம் ஒரு தொழில்நுட்பப் பங்காளியாக மட்டுமே வரையறுக்கப்பட்ட பங்கு வகித்தது. ஐ.வி.எஸ். - ஜி.பீ.எஸ். ஆகிய நிறுவனங்கள்  பிரதான ஒப்பந்தக்காரராக இருந்ததாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் உலகளவில், வி.எப்.எஸ். நிறுவனமானது தனது அனைத்து வாடிக்கையாளர் அரசாங்கங்களுடனும் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆழமாக உறுதிபூண்டுள்ளதுடன், அதற்கமைய இலங்கையின் உரிய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு நல்லெண்ணத்துடன் முழுமையாக இணங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கணக்காய்வு நடத்தப்படவுள்ளது என்பதை அறிந்தவுடனே, வி.எப்.எஸ். குளோபல் நிறுவனமானது 2024 நவம்பர் 7ஆம் திகதி கணக்காய்வு தலைமை அலுவலகத்துக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தி, முழுமையான ஒத்துழைப்பையும் தேவையான எந்தவொரு தகவலையும் வழங்குவதாக அறிவித்தது. இந்தத் தொடர்பு குறித்து கணக்காய்வு தலைமை அலுவலகத்திடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காதபோதும், வி.எப்.எஸ். ஆனது, தேவைப்படும்போது, தணிக்கை தலைமை அலுவலகத்துக்கோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் வேறு எந்தவொரு அதிகாரசபைக்கோ தனது முழு ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.





 
  
