செம்மணி மனித புதைகுழி அகழ்வை பார்வையிட்ட கஜேந்திரகுமார்
அனைத்து கோணங்களிலும் நாங்கள் பார்க்கின்ற போது தமிழர்களின் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை தேடுகின்ற இந்த போராட்டத்தினை நாங்கள் அவதானிக்கின்ற போது செம்மணி ஒரு திருப்புமுனை என்றுதான் சொல்லவேண்டும்.

கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது என்பதையே செம்மணி மனித புதைகுழியும் ஏனைய மனித புதைகுழிகளும் வெளிப்படுத்தியுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இதுவரையில் 89 உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, மேலதிகமாகவும் பல உடல்கள் உறுதிப்படுத்தப்படக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. இந்த மனிதப்புதைகுழி என்பது கிட்டத்தட்ட 96ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம்.
அப்போது செம்மணியில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய சந்திரிகாகுமாரதுங்க அரசாங்கம் அன்றைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை பயன்படுத்தி இது கிருஷாந்தி குமாரசுவாமி கொலைவழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சோமரட்ண ராஜபக்ஷ எரிச்சலால், அரசாங்கத்தின் மீதான கோபத்தில் சொன்ன பொய் என்ற கோணத்தில் உலகையே நம்பவைத்ததுதான் அன்றைய காலத்திலிருந்து இன்றுவரைக்கும் காணப்படுகின்றது.
போர்நடைபெற்ற கடைசிக்காலப்பகுதியிலே இடம்பெற்ற இனஅழிப்பை கூட மூடிமறைத்து ஒரு உள்ளக விசாரணை என்ற பெயரிலே , அதனையும் படிப்படியாக குறைத்து அதனையும் உண்மையும்,நல்லிணக்க ஆணைக்குழுவுடன், எந்தவித குற்றவியல் விசாரணைகளையும் நடத்தாமல் மூடிமறைப்பதை தான் மாறிவந்த ஒவ்வொரு அரசாங்கமும் செய்துகொண்டிருந்தது.
முற்றுமுழுதாக மறைப்பதற்கான ஒரு முயற்சியை சர்வதேசசமூகமும் சேர்ந்து செய்து வந்த செயலில்தான் இந்த செம்மணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை செம்மணி கண்டுபிடிப்பு இரண்டு விடயங்களிற்கு முக்கியமானது.ஒன்று இன அழிப்பிற்கு இது ஒரு முக்கியமான ஆதாரம்,கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது .
அது ஒரு குறிப்பிட்ட சம்பவம் மாத்திரமல்ல, அது தொடர்ச்சியாக காலம்காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. செம்மணியொன்று, முல்லைத்தீவிலே கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி, மன்னார் இவை எல்லாம் எதனை வெளிப்படுத்துகின்றது என்றால் , கூட்டாக அழிக்கின்ற ஸ்ரீலங்கா அரசின் மனோநிலையையே இவை வெளிப்படுத்தியுள்ளன.
சர்வதேசசமூகம் விசாரணைகளை இறுதிப்போரின் இறுதிகாலகட்டத்துடன் மட்டுப்படுத்த முயல்கின்ற நிலையில் செம்மணி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட அவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணைகளை மட்டுப்படுத்துவது பொருத்தமற்றது,நீதியானது இல்லை என்பதை சொல்லிநிற்கின்றது, நிரூபித்திருக்கின்றது.
அனைத்து கோணங்களிலும் நாங்கள் பார்க்கின்ற போது தமிழர்களின் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை தேடுகின்ற இந்த போராட்டத்தினை நாங்கள் அவதானிக்கின்ற போது செம்மணி ஒரு திருப்புமுனை என்றுதான் சொல்லவேண்டும். உண்மையிலேயே நாங்கள் கிருபாகரனிற்கும் நன்றி சொல்லவேண்டும்.
அவர் இந்த விடயத்தை எங்களிற்கு சொன்னது மாத்திரமல்ல, அவர் அரியாலை பகுதியை சார்ந்தவர் என்ற அடிப்படையிலே அந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் என்ற அடிப்படையில் இது செம்மணியின் ஒரு அங்கம் என்பதை எங்களிடம் ஆணித்தரமாக சொன்ன இடத்தில்தான் அவர் அந்தவிடயத்தை எடுத்து பொலிஸிற்கு முறைப்பாடு செய்து - தனக்குஎத்தனையோ அச்சுறுத்தல் வரக்கூடிய நிலையில்தான் அவர் இதனை செய்தவர்.
அதன் இன்னுமொரு பரிமாணமாக நாங்கள் இந்த செம்மணியின் முழுமையான விசாரணையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்வதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் நாங்கள் எங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்துவோம்.