அவுஸ்திரேலிய துணை அமைச்சர் ஜுலியன் ஹில் இலங்கைக்கு வருகை
ஐக்கிய நாடுகள் குடும்பத்திட்ட அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய துணை அமைச்சர் ஜுலியன் ஹில், அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட நிதியில் ஒருபகுதியை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், யுவதிகளின் நலன் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராய்ந்தார்.
பேரனர்த்தத்தினால் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு வருகைதந்திருக்கும் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை, சுங்க மற்றும் பல்கலாசார விவகாரங்கள் துணை அமைச்சர் ஜுலியன் ஹில், 'தித்வா' சூறாவளியை அடுத்து மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கும் நோக்கில் தாம் ஒன்றிணைந்து செயலாற்றிவரும் உதவி முகவரமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்பக்கள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உடனடி நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கென முதற்கட்டமாக உதவி முகவரமைப்புக்கள் ஊடாக ஒரு மில்லியன் அவுஸி.டொலர் நிதியை வழங்கிய அவுஸ்திரேலியா, இரண்டாம் கட்டமாக 2.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை, சுங்க மற்றும் பல்கலாசார விவகாரங்கள் துணை அமைச்சர் ஜுலியன் ஹில், 'தித்வா' சூறாவளியை அடுத்து மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கும் நோக்கில் தாம் ஒன்றிணைந்து செயலாற்றிவரும் உதவி முகவரமைப்புக்களின் பிரதிநிதிகளை 11-12-2025 அன்று சந்தித்தார்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் குடும்பத்திட்ட அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய துணை அமைச்சர் ஜுலியன் ஹில், அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட நிதியில் ஒருபகுதியை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், யுவதிகளின் நலன் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராய்ந்தார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றை செய்திருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், துணை அமைச்சர் ஜுலியன் ஹில்லை இலங்கைக்கு வரவேற்பதாகவும், மிக சவாலான சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் வலுவான ஆதரவையே இந்த விஜயம் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





